தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: பயனாளிக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் வழங்கிய இந்தியன் வங்கி

2nd Jun 2021 04:05 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடி இந்தியன் வங்கியில் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடுத் திட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலை பயனாளியிடம் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்துக்கும், விபத்துக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அகரப் பொதக்குடி இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்த அதங்குடி, மேலவாழாச்சேரியைச் சேந்ந்த, சுந்தரமூர்த்தி மனைவி எஸ்.பிரேமா (37) அண்மையில் இயற்கை மரணம் அடைந்தார்.

இவர் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.330 பிரீமியத் தொகை கட்டியிருந்தார். இதையடுத்து  தொகைக்கான ஆயுள் காப்பீட்டாக ௹. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்வு, வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

கரோனா தொற்று விதிமுறைகளின் படி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் எளிமையாக நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் எம்.சக்திதாசன் தலைமை வகித்தார். ரூ.2 லட்சத்திற்கான காசோலையை சுந்தரமூர்த்தியிடம் அகரப் பொதக்குடி இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் எம்.சக்திதாசன் வழங்கினார்.

ADVERTISEMENT

இதுகுறித்து வங்கி மேலாளர் சக்திதாசன் கூறியது: பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.330 வீதம் சந்தா தொகை செலுத்த வேண்டும். காப்பீடு செய்துள்ளவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால், அவர்களுடைய வாரிசுதாரருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

மேலும், பிரதம மந்திரி விபத்துக் காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12 மட்டுமே சந்தா தொகை கட்டினால் போதும். விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்துள்ளவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், விபத்துக்கு ஏற்றபடி ரூ.50 முதல் ரூ. 2 லட்சம் வரையில் வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், இந்திய இராணுவப் படை முன்னாள் வீரர் எல்.டீ.இரவிக்குமார், வணிக ஒருங்கிணைப்பாளர்கள் பொன்மொழி, ஆர்.கோமதி உள்ளிட்டோர் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT