தமிழ்நாடு

கவர்ச்சிகர விளம்பர வலையில் வீழும் மக்கள்...

30th Jul 2021 11:57 AM | டி. குமார்

ADVERTISEMENT

 

"ஒருத்தன ஏமாத்தனும்னு முடிவு பண்ணிட்டா, அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்கக் கூடாது, அவன் ஆசையைத் தூண்டனும்" சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் இது. இதை வெறும் வசனமாகவும், திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியாகவும் மட்டுமே கடந்து போவதால்தான், மனிதர்களின் பேராசை அவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறது. 

குறைந்த விலை என்றால் மக்கள் தேவைப்படாத பொருளாக இருந்தாலும் கூட வாங்கிப் போடுவோமே என்று நினைப்பார்கள்.  அதுவே தேவைப்படும்.. தினந்தோறும் தேவைப்படும் பொருள் என்றால்.. விட்டுவிடுவார்களா என்ன?

கரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் இருந்தே முட்டை பயன்பாடு அதிகரித்து வந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையுடன் நாளொன்றுக்கு 2 அவித்த முட்டைகளும் வழங்கப்பட்டன. இதுவும், பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் இருந்தவர்கள் உணவில் அதிக முட்டைகளை சேர்த்துக் கொண்டதும் முட்டை விற்பனையை உயர்த்தின.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. ஆண்டு முழுவதும் குறைந்த விலைக்கு முட்டை: விளம்பரத்தின் பகீர் பின்னணி

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் ஒரு தினசரி நாளிதழின் முதல் பக்கத்தில், வருடம் முழுவதும் ஒரு முட்டை ரூ.2.24 காசுக்கு வழங்குவதாகவும்,  இதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல.. முதலில் பணம் செலுத்தும், 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என்றும் இத்திட்டம் கடைகளுக்கும், மறு விற்பனையாளர்களுக்கும் பொருந்தாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அதிரடி சலுகை விளம்பரம் பலரையும் ஒரு நொடி அசரவே செய்திருக்கும்.

இன்றைய நிலவரப்படி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலையாக ஒரு முட்டை ரூ.4.80 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சென்னையில் ஒரு முட்டை ரூ.5.20 காசுக்கு விற்பனை செய்யப்படலாம். 

இப்படி கோழி முட்டையை மொத்தமாக விற்பனை செய்யும் மையங்களே, ஒரு முட்டையை  ரூ.4க்கு மேல் விற்பனை செய்யும் போது, ரூ. 2.24 பைசாவுக்கு முட்டையை எப்படி விற்பனை செய்ய முடியும்? அதுவும் ஆண்டு முழுவதும் இதே விலையில்?

இப்படி ஒவ்வொருவருக்கும் கேள்வி எழுந்திருக்க வேண்டும். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர்களை விட, இந்த விளம்பரத்தை நம்பி உடனடியாக பணத்தைச் செலுத்தும் கூகுள்பே எண்ணை தங்கள் செல்லிடப்பேசிகளில் சேமிக்கத் தொடங்கியவர்களே அதிகம்.

இவ்வளவுப் பேர் பார்த்த இந்த விளம்பரத்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பார்க்காமல் இருந்திருப்பார்களா? இதில் ஏதோ மோசடி நடக்கிறது என்று உணர்ந்து, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அழைப்பாணை பிறப்பித்து விசாரித்தது. அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் நிறுவனர் சிவம் நரேந்திரன், விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர், இந்த நிறுவனத்தை உரிமம் பெறாமல் நடத்தி வந்ததும், தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை எனவும்,  பணம் செலுத்தியவர்களுக்கு, பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதுபோலவே பணத்தை திரும்ப அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொருளாதாரக் குற்றப்பிரிவு, பொதுமக்கள் இதுபோன்ற, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்தால் தீர விசாரித்து விட்டு முதலீடு செய்ய வேண்டும். போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நமக்கு இது புதிதல்ல, ஈமு கோழி முட்டை தொடங்கி அமேசான் காடுகளில் இருந்து கிடைக்கும் அரிய வகை ஆயில் வரை டிசைன் டிசைனாக விளம்பரங்களைப் பார்த்தும் இருக்கிறோம், வெறும் விளம்பரத்தைப் பார்த்தே வாங்கி ஏமாந்தும் இருப்போம்.

இதையும் படிக்கலாமே.. இப்படி ஏமாந்தால் எப்படி? என்னதான் செய்யும் காவல்துறை?

விளம்பரங்கள் தொழில் வர்த்தக உலகின் நரம்பு மண்டலங்களாக செயல்படுகின்றன. இதனால் நாம் படிக்கும் செய்தித்தாள், இணையம், டிவி, ரேடியோ, செல்லிடப்பேசி, மின்னஞ்சல், குறுந்தகவல், சாலை மற்றும் ரயில், விமான பயணங்கள் தொடங்கி பொது கழிவறைகளின் கதவுகள் வரை உணவுப் பொருள்கள், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆன்மீகம், முகப் பூச்சுகள், ஹேர் ஆயில், ஷாம்பூ, ஆடைகள், அணிகலன்கள், நகைகள், அலங்காரப் பொருள்கள், லாட்டரி சீட்டு, குறைந்த வட்டிக்கு  கடன்,  பூச்சி மருந்துகள், கொசு விரட்டிகள், சோப்பு, பிளேடு, குண்டூசி என நிரம்பி வழிகின்றன விளம்பரங்கள்.  விளம்பரங்கள் செய்வது நிறுவனங்களின் விற்பனை யுக்தியின் ஒரு வகை. அது அவர்கள் வேலை. அவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள். இதற்கிடையே பல மோசடியான விளம்பரங்களும் வரத்தான் செய்யும்.

ஆனால், விரிக்கும் அனைத்து வலைகளிலும் நாமே சென்று விழத்தான் வேண்டும் என்பது அவசியமே இல்லை. ஒரு முட்டையை பக்கத்துக் கடைக்காரர் 5 காசுகள் குறைவாகத் தருவாரா என்று கேட்டுப் பாருங்கள். கொடுக்கவே மாட்டார். பத்து புடவை எடுக்கிறேன், ஒரு புடவை இலவசமாக கொடுங்கள் என்று வழக்கமாக செல்லும் புடவை கடையில் கேட்டுத்தான் பாருங்களேன்.. கொடுக்க மாட்டார்கள். இப்படி இவர்களால் முடியாதது, நம் கண்ணால் பார்க்காதவர்களால் எப்படி சாத்தியமாகும். யாரும் யாருக்கும் எதையும் எப்போதும் நட்டத்துக்கு விற்க மாட்டார்கள்.  அப்படியே நட்டத்துக்கு விற்பதாகவே வைத்துக் கொள்வோம்.. நட்டத்துக்கு விற்கும் பொருளுக்கு லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் வேறு கொடுப்பார்களா? எனவே இதை நன்கு புரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது பொதுமக்கள் பேராசையைத் தூண்டும் விளம்பரங்களைத் தவிர்த்து, தரமான பொருள்களை, நியாயமான விலையில் வாங்க முன்வர வேண்டும்.

Tags : bank fraud tamilnadu egg advertising சதுரங்க வேட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT