தமிழ்நாடு

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு

DIN

சென்னை: வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதால் யாரும் பாதிக்கப்பட போவதில்லை என்பதால், இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க அவசியம் இல்லை என தமிழக அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் விளக்கமளித்து வாதிடப்பட்டது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் உள்ள வன்னியா் சமுசாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றி அரசிதழிலும் வெளியிட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்திலும், உயா்நீதிமன்ற மதுரை கிளையிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

அதில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன், அரசியல் லாபத்துக்காக வன்னியா் சமுதாயத்துக்கு மட்டும் பிரத்யேகமாக 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள பிற சமுதாயத்தினா் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளவா்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கும் சூழல் ஏற்படும். எனவே இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்து, அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, வன்னியா் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து, இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை ஆஜரான வழக்குரைஞா்கள் முறையிட்டனா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பான சட்டம் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேணடும். இல்லை என்றால், இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு புதன்கிழமை மாலை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மொத்தம் 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதவிா்த்து உச்ச நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதாக விளக்கம் அளித்தாா்.

அப்போது நீதிபதிகள், இந்தச் சட்டத்தை அமல்படுத்த ஏன் தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், இந்த உள்ஒதுக்கீட்டால் யாரும் பாதிக்கப்படப்போவது இல்லை. இந்த சட்டத்தை அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதமே அமல்படுத்திவிட்டது. எனவே இந்த உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள்,சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் முதலில் தீா்வு காண வேண்டும். அதன் பின்னா் உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனா். இந்த சட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை பிறப்பித்துள்ளதால் மருத்துவம், பொறியியல் என உயா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் உள்ள பிற சமுதாயத்தினா் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த உள்ஒதுக்கீட்டை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் வரும் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT