தமிழ்நாடு

பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம் நிறுத்தம்

28th Jul 2021 06:38 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் நுழையும் ஒற்றை ஆண் யானை பாகுபலிக்கு ரேடியோ காலர் ஐடி பொருத்தி கண்காணிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து இந்த பணிக்காக டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்பட்ட கலீம், மாரியப்பன், வெங்கடேஷ், ஆகிய மூன்றும் கும்கி யானைகள் மீண்டும்  டாப்சிலிப்க்கு செவ்வாய்க்கிழமை முதல் செல்லப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனப்பகுதியில் இருந்து மாலை நேரங்களில் வெளியேறும் ஒற்றை ஆண் யானை பாகுபலி விளை நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வந்ததால் இந்த யானைக்கு ரேடியோ காலர் ஜடி  பொருத்தி யானையை கண்காணிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதனையடுத்து  ரேடியோ காலர் ஐடி பொருத்தும் பணிக்காக 'டாப்ஸ்லிப்' யானைகள் வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து, கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய 3 கும்கி யானைகள் கடந்த மாதம் வரவழைக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்த மருத்துவ குழுவினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர் இதனை தொடர்ந்து  கடந்த மாதம் 27 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானைக்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த தயாராக இருந்த நிலையில் வனத்துறையின் பிடியில் சிக்காமல் யானை வனப்பகுதிக்குள் சென்றது. 

யானையினை வனத்துறையினர் தொடர்ந்து பின் தொடர்ந்ததால் அதன்  மனநிலை சற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, யானை இயல்பு நிலை திரும்பும் வரை அதனை  10 நாட்கள் கண்காணித்து பின்னர் அதற்கு ரேடியோ காலர் ஐடி பொருத்த  வனத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், பாகுபலி யானை  நெல்லிமலை காப்புக் காடு  அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதாலும்  மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஜடி  பொருத்தும் திட்டத்தை தற்காலிகமாக வனத்துறையினர் கைவிட்டனர்.

இதனையடுத்து இந்த பணிக்காக வரவழைக்கப்பட்ட கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகிய மூன்று கும்கி யானைகளும் மீண்டும் டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர், கூறுகையில் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் ஜடி  பொருத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான உரிய நேரம் கிடைக்காததால் பணி தாமதமாகி வந்தது, தற்போது யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதாலும் ,மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாலும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இந்த மூன்று யானைகளும் மீண்டும் முகாமுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

பாகுபலியை பிடிக்க சரியான நேரம் கிடைத்தவுடன் மீண்டும் கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலி யானைக்கு  ரேடியோ காலர் கருவி பொருத்தி கண்காணிக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT