தமிழ்நாடு

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது: வைகோவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி

24th Jul 2021 05:51 PM

ADVERTISEMENT

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது என்று வைகோவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். 
தில்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டடம் ரயில் பவனில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி. அ.கணேசமூர்த்தி ஆகியோர் இன்று சந்தித்தனர். 
இந்த சந்திப்பின்போது அமைச்சரிடம், வைகோ, இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. 
இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 
அதற்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எந்தக் காரணத்தைக் கொண்டும், ஐசிஎஃப் நிறுவனத்தை தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார். 

Tags : Vaiko
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT