தமிழ்நாடு

ஆடி முதல் வெள்ளி உற்சவம்: மடப்புரம், தாயமங்கலம் கோயில்களில் குவிந்த பக்தர்கள் 

DIN

மானாமதுரை: ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயில் இளையான்குடி அருகே தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கோயில்கள் திறக்கப்படவில்லை. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் பொதுமுடக்கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். அதிலும் ஆடி வெள்ளி என்பது பெண் தெய்வங்களுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

பொதுமுடக்க தளர்வுகளுக்குப் பின் வந்த ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மடப்புரம் காளியை தரிசிக்க கோயிலில் குவிந்தனர்.

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் காளி கோயிலில் சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்

இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் நீண்ட வரிசையில் நின்று காளியை தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் நடைபெற்ற உச்சிகால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாவிளக்கு பூஜை நடத்தியும் நெய்விளக்கு ஏற்றியும் ஆடு, கோழிகளை பலி கொடுத்தும் எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி காளியை வழிபட்டனர்.

ஏராளமான போலீசார் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்கள் நெரிசல் இன்றி அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்தனர்.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் திருப்புவனம் புதூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூடினர்

தாயமங்கலம் கோயில் 

இளையான்குடி வட்டம் தாயமங்கலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரசித்தம் பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி அம்மன் சந்தனக்கப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மாரியம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்தும்  பக்தர்கள் பஸ், கார், வேன்,லாரி பைக்குகளிலீ கோயிலுக்கு வந்து குவிந்தனர்.

ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி ஆடு கோழிகளை பலி கொடுத்து அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றினர். 

பெண்கள் நெய் விளக்கேற்றியும் எலுமிச்சை பழத்தால் தீபம் ஏற்றியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் அங்கப்பிரதட்சணம் செய்தும் மாரியை வழிபட்டனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, தீச்சட்டி சுமந்தும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை சுற்றி வந்தும் முத்துமாரியம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றி அம்பாளை தரிசனம் செய்தனர்.

முத்துமாரி அம்மனை தரிசிக்க கோயிலுக்குள் நீண்ட வரிசை காணப்பட்டது.

மானாமதுரை கோயில்கள் 

மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்தனர். மதியம் கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். 

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயில், உடை குளம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல அம்மன் கோயில்களிலும்  சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT