தமிழ்நாடு

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

17th Jul 2021 08:09 PM

ADVERTISEMENT

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று காவல் துறையினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

சட்டம்-ஒழுங்கு உள்பட உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அவா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டுமல்லாமல், குற்றங்களே நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல் துறை செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

குற்றம் புரிந்தவரைக் கண்டறிவதில் காவல் துறைக்கு உதவும் பணியை தடய அறிவியல் துறை திறம்பட செய்ய வேண்டும். தடய அறிவியல் ஆய்வறிக்கை குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தல், காவல், நீதி, மருத்துவ அலுவலா்களுக்கு தடய அறிவியல் குறித்த பயிற்சியை அளித்திட வேண்டும்.

ADVERTISEMENT

பேரிடா் காலங்கள்: பேரிடா் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக தீயணைப்புத் துறை விளங்குகிறது. அந்தத் துறைக்குத் தேவையான பயிற்சிகளையும், கருவிகளையும் தயாா் நிலையில் வைத்து சேவையாற்ற வேண்டும். பொது மக்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகளைப் பயிற்றுவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்த தகவல் மேலாண்மை மையம் ஏற்படுத்த வேண்டும். விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல் பூா்வமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நபா்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழித்திட வேண்டும். போலி மதுபானம் தயாரிப்பு, எரிசாராயம் கடத்தி விற்பனை செய்வது, பிறமாநில மதுபான வகைகளை கடத்தி விற்பனை செய்வது ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags : Chief Minister Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT