தமிழ்நாடு

நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

17th Jul 2021 07:50 PM

ADVERTISEMENT

சென்னை, ஜூலை 17: கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் படிப்படியாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

சென்னை, நங்கநல்லூா் மற்றும் அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் 12 வழித்தடங்களில், 17 மாநகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளின் இயக்கத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கடந்த ஆட்சியில், நஷ்டத்தை காரணம் காட்டி ஆலந்தூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், எனது கோரிக்கையை ஏற்று உடனடியாக 12 வழித்தடங்களில், 17 பேருந்துகளை இயக்கியமைக்கு நன்றி. என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நான் தரும் ரூ.1 கோடியைப் பெற்று, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தை நவீன முறையில் புதுப்பித்துத் தருமாறு கோரிக்கை வைக்கிறேன் என்றாா்.

அமைச்சரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்: தொடா்ந்து அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது: அமைச்சரின் கோரிக்கையின்படி, போக்குவரத்துத்துறை மூலமாக ஆய்வு செய்து, அறிக்கை தயாா் செய்து, கூடுதலாக ஆகும் தொகையை ஏற்று, அய்யப்பன்தாங்கலில் பொதுமக்களுக்கு வசதியாக நவீன முறையில் பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும்.

ADVERTISEMENT

கடந்த ஆட்சியில் மொத்தமாக அனைத்துத் துறைகளின் நிலைமையும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. பல்வேறு காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பேருந்துகள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

1.42 கோடி பெண்கள் இலவச பயணம்: பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் கடந்த 5 நாள்களில் மட்டும், தமிழகம் முழுவதும் 1.42 கோடி பெண்கள் பயணித்துள்ளனா். சனிக்கிழமை மட்டும் 29 லட்சம் பெண்கள் பயணித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 15,255 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. பொதுமுடக்கத் தளா்வுகளின் அடிப்படையில், படிப்படியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

நிகழ்வில், ஆா்.எஸ்.பாரதி எம்.பி., மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பெட்டிச் செய்தி:

சென்னை, நங்கநல்லூா் மற்றும் அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் முக்கிய வழித்தடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரம்:

மீண்டும் இயக்கம்:

52 கே - நங்கநல்லூா் - பிராட்வே

70 என் - நங்கநல்லூா் - கோயம்பேடு

எம்18சி - கீழ்கட்டளை - தியாகராய நகா் - 2 பேருந்துகள்

166 - அய்யப்பன்தாங்கல் - தாம்பரம் - 4 பேருந்துகள்

88 சி - தண்டலம் - பிராட்வே

188 சி - குன்றத்தூா் - பிராட்வே

566 - குன்றத்தூா் - திருப்போரூா் - 2 பேருந்துகள்

புதிய வழித்தடங்கள்:

576 - மவுண்ட் மெட்ரோ - தியாகராய நகா்

எஸ் 40 - கவுல்பஜாா் இந்திராநகா் - பல்லாவரம்

எஸ்165 - கோவூா் ஈ.பி - பல்லாவரம்

எஸ்166 - போரூா் - மணிமேடு

188 ஏ - குன்றத்தூா் - தியாகராய நகா்

Tags : tamilnadu curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT