தமிழ்நாடு

கற்பனையான குயிலிக்குச் சிவகங்கையில் சிலையா?

13th Jul 2021 01:20 PM

ADVERTISEMENT

சிவகங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற குயிலிக்கு சிலை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கத்தின் செயலர் குருசாமி மயில்வாகனன் அறிக்கையொன்றில் தெரிவித்திருப்பதாவது: 

"சிவகங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற குயிலி எனும் இளம்பெண்ணானது உண்மையான வரலாற்றுப் பாத்திரமல்ல, கற்பனைப் பாத்திரம் என்பதைத் தக்க ஆவண, ஆதாரங்களுடன் கடந்த 16.06.2018 சிவகங்கையில் வெளியிடப்பட்ட குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள ’ஒப்பனைகளின் கூத்து` நூலின் மூலமாக நிறுவப்பட்டுள்ளது. இன்று வரையிலும் அந்நூல் எடுத்துக்காட்டியுள்ள ஆதாரங்களை யாரும் மறுக்கவில்லை. சிவகங்கை மாவட்ட அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியும் குயிலி கற்பனை என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.

மேலும், குயிலி நினைவுச் சின்னத்தை அகற்றவும் பாட நூல்களில் குழப்பமூட்டும் வகையில் இடம்பெற்றுள்ள குயிலி குறித்த தகவல்களை நீக்கவும் சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக அரசானது குயிலிக்கு சிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் நடத்துவதாக அறிகிறோம். அவ்வாறு சிலை நிறுவப்பட்டால் அது வீரமிக்க சிவகங்கையின் வரலாற்றிற்கு இழுக்குச் சேர்ப்பதாகும். பொய்யை உண்மை என நம்பவைக்கின்ற குழப்பத்தை மக்களிடையே உண்டாக்குவதாகும்.

மேலும் சிவகங்கையின் வரலாற்றுப் பெருமைக்குரிய மாந்தர்களில் ராணி வேலுநாச்சியார் தவிர்த்து சிவகங்கையை உருவாக்கிய மன்னர் சசிவர்ணத்தேவர், நவாப்பின் படைக்கு முதல் களப்பலியான முத்துவடுகநாதத் தேவர், சீமையைப் பாதுகாக்க முன்முயற்சி எடுத்த அமைச்சர் தாண்டவராய பிள்ளை, கொடுந்துயர் முடிவெய்திய அரசர் வெங்கண் பெரிய உடையணத் தேவர், தன் வாழ்க்கையையே இழந்த வீரன் துரைச்சாமி, எல்லாவற்றிற்கும் மேலாக ஜம்புத்தீவுப் பிரகடனத்தை வெளியிட்டு நிலைத்த புகழ் கொண்ட மருதுபாண்டியர்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதால் திருப்பத்தூரில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான வீரத் தியாகிகள், இவர்களுக்கெல்லாம் சிலைகளோ நினைவுச் சின்னங்களோ சிவகங்கையில் வைக்கப்படாத நிலையில் கற்பனையான குயிலிக்குச் சிலை வைப்பது மக்களிடம் எதிர்ப்பான மனநிலையையே உருவாக்கும்.

மேலும், கற்பனைப் பாத்திரமான குயிலியைப் பல்வேறு சாதியினரும் தங்களுக்கானதாகச் சொந்தம் கொண்டாடுவதால் மக்களுக்கிடையே சாதிய மோதல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது.

எனவே, தமிழக அரசானது குயிலிக்கான நினைவுச் சின்னத்தை அகற்ற வேண்டும் எனவும் பாடநூல்களில் உள்ள குயிலி குறித்த குறிப்புகளை நீக்க வேண்டும் எனவும் சிலை வைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார் குருசாமி மயில்வாகனன். 

Tags : sivaganga
ADVERTISEMENT
ADVERTISEMENT