கம்பம்: தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெ.அழகேசன் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அழகேசன் (50). இவர் சிறப்பு சார்பு ஆய்வாளராக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தார்.
மனைவி பரிமளா (41), மகள் நிகிதா(19), மகன் பாலாஜி (14), ஆகியோருடன் கம்பத்தில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 30-ல் கரோனா பரிசோதனை எடுத்தார். ஜூலை 2-ல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் ஜூலை 4 ல் உத்தமபாளையம் அருகே உள்ள கரோனா தனிமை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
ஜூலை 8-ல் மூச்சுத்திணறல் காரணமாக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தார்.
உடல் அடக்கம் சொந்த ஊரான குள்ளப்பகவுண்டன்பட்டியில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க காவலர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.