தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே ரூ.100 கோடி நில மோசடி: கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

12th Jul 2021 05:34 PM

ADVERTISEMENT


காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே கொளப்பாக்கம் கிராமத்தில் சாலை வசதிக்காக அரசுக்குக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் விசாரணைக்கு திங்கள்கிழமை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை ஊராட்சியில் உள்ளது கொளப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் சாலை வசதிக்காக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.பழனி என்பவர் தனக்கு சொந்தமான 85 சென்ட் இடத்தை அரசுக்கு தானமாக கடந்த 2004 ஆம் ஆண்டு வழங்கியுள்ளார். இவரைப் போல 30 பேர் மொத்தம் 10 ஏக்கர் 21 சென்ட் இடத்தை தானமாக படப்பை ஊராட்சியின் பெயரில் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த இடம் சாலை வசதிக்காக பயன்படுத்தப்படாமல் அதிமுக பிரமுகரான பெருமாள்சாமி என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டுவிட்டதாக காஞ்சிபுரம் ஆட்சியர் மா. ஆர்த்தியிடம் ஆர்.பழனி புகார் செய்துள்ளார்.

இவரது புகாரின் பேரில் ஆட்சியர் அந்த இடம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஆர்.பழனி கூறியது, கடந்த 2004 ஆம் ஆண்டு நான் உள்பட மொத்தம் 30 பேர் 10 ஏக்கர் 21 சென்ட் இடத்தை கொளப்பாக்கத்தில் சாலை வசதிக்காக படப்பை ஊராட்சிக்கு தானமாக வழங்கினோம். தற்போது அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை அதிமுக பிரமுகரான பெருமாள்சாமி என்பவர் தனது பெயருக்கு போலி ஆவணம் தயாரித்து பட்டா மாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு இன்றைய விலையில் ரூ.100 கோடிக்கும் மேலாக இருக்கும். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் புகார் செய்தோம். அவர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT