தமிழ்நாடு

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநில அமைப்புக்குழு கூட்டம்

11th Jul 2021 01:23 PM

ADVERTISEMENT

மதுரை: தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின்(அரசு உதவி பெறும் பள்ளிகள்) மாநில அமைப்புக் குழு கூட்டம், மதுரை தனபால் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது.

கரோனா பெருந்தொற்றுக்குப்  பலியான ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் போன்றோருக்கும், மனித உரிமைப் போராளி அருள்தந்தை ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநில துணை பொதுச்செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். அமைப்பின் மாநிலத் தலைவர் அமலராஜன் தனது தலைமை உரையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் தேவை குறித்து எடுத்துரைத்தார்.

ADVERTISEMENT

தனபால் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் தனபால் ஜெயராஜ், சங்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர் சிவபெருமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வு அடிப்படையில் அமைப்பின் பெயரில் திருத்தம் செய்வது, புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

நிகழ்வில், 7.5 விழுக்காடு மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அவர்களது எண்ணிக்கை அடிப்படையில் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும், பணிக்காலத்தில் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், அலுவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறையில் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்,

2019-20 ஆம் கல்வி ஆண்டில் அரசு அனுமதி பெற்ற பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியமின்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் பெற்று, ஊதியம் பெற்று வருகின்ற ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பலன்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆங்கில வழி பிரிவு மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் கனகராஜ், புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகம் செய்து நிறைவுரை ஆற்றினார். மதுரை ஆசிரியர் ஜான்சன் நன்றி கூறினார்.

நிகழ்வில் மாநில துணைத் தலைவர் ஐசக் சாம்ராஜ், கிருஷ்ணா பாய், ஜோஸ் பென்சிகர், மாநில அமைப்புச் செயலாளர் செல்வம், மாநிலப் பொருளாளர் அப்துல் ரசாக், அருட்சகோதரி சகாயராணி,  மாநில செய்தித் தொடர்பாளர் டோமினிக் ராஜ் உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT