தமிழ்நாடு

பாலியல் தொல்லை: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது

7th Jul 2021 12:02 PM

ADVERTISEMENT

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவரை ஸ்ரீரங்கம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில், சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபையின் தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த மாணவிகள் 5 பேர் தமிழ்த்துறை தலைவர் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க  புகார் மனுவை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பினர். 

அதில், வகுப்பறையில், மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் பேராசிரியர் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

ADVERTISEMENT

மேலும், அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நளினி என்பவர் , துறை தலைவரை பார்க்க போகும்போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டுதான் போக வேண்டும்’ என வலியுறுத்துவதாகவும் இதனால்,  கல்லுாரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது ஐந்து மாணவிகள் பாலியல் சீண்டல் புகார் கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து  திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரிதா மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிஷா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. 

பேராசிரியர் மீதான மாணவிகளின் பாலியல் புகாரில் உண்மை தன்மை உள்ளதாக மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுனிஷா தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவிகள் கல்வி நலன் பாதிக்கும் பட்சத்தில் பாலியல் புகார் குறித்து மாவட்ட சமூகநலத்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுனிஷா தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுனிஷா அளித்த புகாரின் பேரில், துறைத்தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியை நளினி சுந்தரி ஆகியோர் மீது திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில், 294 (B), 354 (A) (D), 509, 109 மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

இதனடிப்படையில், தற்போது துறைத்தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமறைவாக உள்ள உதவி பேராசிரியை நளினி சுந்தரியை கைது செய்யும் முயற்சியில் தனிப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT