தமிழ்நாடு

கோட்டூர் அருகே எண்ணெய்க் குழாயில் உடைப்பு: விளைநிலம் சேதம்

1st Jul 2021 04:00 AM

ADVERTISEMENT


மன்னார்குடி:  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதன்கிழமை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலில் எண்ணெய் தேங்கியதால், நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விளைநிலம் சேதமடைந்தது.
மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் பூமிக்கடியில் ஆழ்துளை கிணறு அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து வருகிறது. 
ஆதிச்சபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் எடுக்கப்படும் எண்ணெய், பூமிக்கடியில் குழாய் அமைத்து நல்லூரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்துக்கு சுத்திகரிப்புக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில்,  புதன்கிழமை காலை பனையூர் பகுதியில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு,   வீ. சிவகுமார் என்பவரது நேடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவுக்கு வயல் முழுவதும் எண்ணெய் பரவியது. இதனால், நெல் விதைப்புவிட்ட வயல் முழுவதும் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து, டிஎஸ்பி  பழனிசாமி, மன்னார்குடி கோட்டாட்சியர் த. அழகர்சாமி, கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மு. மணிமேகலை உள்ளிட்டோர் எண்ணெய் குழாய் உடைப்பு குறித்து ஓஎன்ஜிசி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
ஓஎன்ஜிசி தலைமை பொது மேலாளர் அழகிரி தலைமையில் அலுவலர்கள்,   ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எண்ணெய் குழாய் உடைப்பை சரிசெய்தனர். 
10 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை: ஓர் ஏக்கரில் அண்மையில் நேரடி நெல் விதைப்பு செய்ததாகவும், அது முளைப்பு விட்டிருந்த நிலையில், எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல் முழுவதும் எண்ணெய் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதனால், ஓஎன்ஜிசி நிர்வாகம் ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என வயல் உரிமையாளர் சிவக்குமார் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT