காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் ஊராட்சியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா குண்டுக்கல் ஊராட்சியானது சிறு சிறு மலை குன்றுகளால் சூழப்பட்ட ஊராட்சியாகும். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதி வேண்டும் என்றால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடையாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் இவர்களின் சிரமத்தைப் போக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் குண்டுக்கல் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிகிச்சையைத் தொடங்கி வைத்தார்.
இந்த மினி கிளினிக் வாயிலாக சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங், ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.