வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் வாய்க்காலில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தலைஞாயிறு காவல் நிலையம் அருகேயுள்ள ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையன் மகன் மணிகண்டன்(24). இவர், அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் ஒருவரை மாலையில் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வெள்ளப்பள்ளம் சென்றுள்ளார்.
வீடு திரும்பாத நிலையில் கிராமத்திற்குக் கொண்டுவிடச் சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனிடையே, தலைஞாயிறு - வேட்டைக்காரனிருப்பு பிரதான சாலையின் குறுக்கே அரிச்சந்திரா நதி ஆற்றில் இருந்து பிரியும் பழையாற்றங்கரை ராஜன் வாய்க்காலில் மிதந்த சடலம் மணிகண்டன் என்பது சனிக்கிழமை காலை தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தலைஞாயிறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த கவால்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.