திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரக்கடை ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் இக்கோயிலின் அருகிலேயே அய்யனார் கோயில் என இரண்டு கோயில்கள் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களுக்கும் மரக்கடை, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, கோரையாறு, ராஜகோபால சுவாமி தோட்டம், மேல் கொண்டாழி, அதங்குடி மற்றும் சேகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளியூர் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு குலதெய்வமாகவும் விளங்குகின்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா, வைகாசிப் பெருவிழா, ஆடிப்பெருக்கு விழா மற்றும் ஆவணி மாத விழா என மாதந்தோறும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இச்சமயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல ஊர்களிலிருந்தும் வருகிறார்கள். கோயிலின் எதிரே ஆவணி மாதத்தில் நடைபெறும் தீ மிதித் திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர்.
மாரியம்மன் கோயிலின் எதிரேயுள்ள, அம்மன் குளத்தை ஒட்டினார் போல், உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும், மின் கம்பத்திலிருந்து செல்லக்கூடிய, மின் கம்பிகள், குளத்தின் தண்ணீரைத் தொட்டு விடும் தூரத்தில் தவழ்ந்தபடி செல்கிறது. மின்சாரம் செல்லக் கூடிய மின் கம்பிகள், தண்ணீரில் பட்டாலோ, அறுந்து விழுந்தாலோ குளத்தில் குளிப்பவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உயிரிழப்பு ஏற்படக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.
உடனே, சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சாய்ந்த மின் கம்பத்தை நேராக நிமிர்த்தி வைத்து, தண்ணீர் படும்படியாக தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை இழுத்துக் கட்ட வேண்டும் என அப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியது, இந்த மின் கம்பம் கஜா புயலின் போது சாய்ந்தது. இதுவரை பலமுறை மின்சார வாரியத்திற்குத் தெரியப்படுத்தியும் கண்டு கொள்ளவில்லை. வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை போன்ற நாள்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இப்பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பம் பக்தர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சாய்ந்த மின் கம்பத்தின் கீழே, மரத்தை முட்டுக் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. தினம் தினம் சாய்ந்து கொண்டே வருகிறது. குளத்தில் குளிக்க வரும் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயத்துடன் தான் வந்து செல்கின்றனர். பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் முன் மின்சாரக் கம்பத்தைச் சரி செய்ய வேண்டும் என்றார்.