திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 4 பள்ளிகளில் படிக்கும் 2,161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் சனிக்கிழமை வழங்கினார்.
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 549 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார்.
அதே போல, நஞ்சப்பா நகரவை பள்ளியில் 350 மாணவர்களுக்கும், ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1,121 மாணவிகளுக்கும், விஜயாபுரம் அரசுப் பள்ளியில் படிக்கும் 141 மாணவ, மாணவிகள் என மொத்தம் 2,161 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளைச் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கண்ணபிரான், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.