தேர்தல் நேரத்தில் வேல் பிடித்தாலும், ஆள் பிடித்தாலும் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ஜெ கோயில் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக கட்டப்பட்ட கோவிலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தினம் ஒரு நாடகம் நடத்தி வருகிறார். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
அதிமுகவுக்கு மக்கள் சக்தி மட்டுமின்றி தெய்வ சக்தியின் துணை எப்போதும் உண்டு.
கடவுளை இழிவுபடுத்தும் சில தீயசக்திகள் தேர்தல் நேரத்தில் மட்டும் மரியாதை செலுத்துவர் தேர்தலுக்காக வடக்கே இருந்து ஆள்பிடிக்கும், வேல் பிடிக்கும் தீய சக்தி ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.