தமிழ்நாடு

கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட நடமாடும் உணவு வழங்கும் சேவை: இந்திய ரயில்வேக்கு உத்தரவு

28th Jan 2021 01:05 PM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட நடமாடும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்திய ரயில்வே 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தியன் ரயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக ரயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் நடமாடும் உணவு வழங்கும் சேவையையும் நிறுத்தி வைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், ரயில்களில் நடமாடும் உணவு வழங்கும் சேவைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, இந்திய ரயில்வே ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, உணவு வழங்கும் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை மீண்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில், ரயில்வேயில் பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் உணவு வழங்கும் சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என  புகார் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

அப்போது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி தரப்பில், புதிய ஒப்பந்தப்புள்ளி என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும் தான். வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கரோனா பொதுமுடக்கத்தால் ரயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, அவர்களின் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து 4 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : catering service Indian Railways
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT