தமிழ்நாடு

சம வாய்ப்பு வழங்கவே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 இடஒதுக்கீடு: தமிழக அரசு பதில் மனு

DIN


சென்னை: அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்ததாக தமிழக அரசு தாக்கல் பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கம் சாா்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில், அரசுப் பள்ளி மாணவா்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களும் மருத்துவப் படிப்பில் சேர ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதத்துக்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலேயே, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநா் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த, இட ஒதுக்கீட்டிலும் கூட நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை வழங்கப்படும். இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டில் 435 அரசுப் பள்ளி மாணவா்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் இடங்களை பெற்றுள்ளனா். இந்தச் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசு பள்ளி மாணவா்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வுக்குப் பின்னரே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விதிமீறல் இல்லாத போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் தனியாா் பள்ளி மாணவா்கள் முன்னேறியவா்களாக உள்ளனா். எனவே அவா்களோடு அரசு பள்ளி மாணவா்களை ஒப்பிட முடியாது. இட ஒதுக்கீடு கொடுத்தாலும், நீட் தோ்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்குத்தான் மருத்துவப் படிப்புகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சட்டம் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்து மனுதாரா்கள் தவறான குற்றச்சாட்டுகளை மனுவில் கூறியுள்ளனா். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு தரப்பு பதில்மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரா்கள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனா். மேலும் புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மத்திய அரசும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT