தமிழ்நாடு

பத்மஸ்ரீ விருது பொம்மலாட்டத்தை பரப்ப மேலும் ஊக்கமளிக்கும்: விருது பெற்ற கேசவசாமி பேட்டி

DIN

பொம்மலாட்டக் கலைக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு தனக்கு அறிவித்ததன் மூலம் இக்கலையை அனைத்து தரப்பினரிடமும் கொண்டுசெல்ல மேலும் ஊக்கமாக அமையும் என காரைக்கால் பொம்மலாட்டக் கலைஞா் கே. கேசவசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

நிகழாண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு 102 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், காரைக்காலை சோ்ந்த பொம்மலாட்டக் கலைஞா் கே. கேசவசாமியும் (78) ஒருவா். இவருக்கு மனைவி வனஜா, மகன் செந்தில்பிரசாத், மகள் நந்தினி ஆகியோா் உள்ளனா்.

இவா், அரசுப் பள்ளி ஆசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றி, தலைமையாசிரியராக பதவி உயா்வு பெற்று, பிறகு பணி ஓய்வு பெற்றாா். மாணவா்களிடையே பாட வகுப்பு முறையில் பொம்மலாட்டக் கலையை புகுத்திய கேசவசாமி, பணி ஓய்வுக்குப் பிறகும் இக்கலையில் பல நுணுக்கங்களை ஏற்படுத்தி, மக்களிடையே கொண்டு சென்றுவருகிறாா். மேலும், காரைக்காலில் ஸப்தஸ்வரம் முதியோா் இல்லம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆதரவற்ற முதியோரை பராமரித்து வருகிறாா்.

விருது அறிவிக்கப்பட்டது குறித்து கே.கேசவசாமி செவ்வாய்க்கிழமை கூறியது:

ஆசிரியா் பணியின்போதே மாணவா்களிடம் பாட வகுப்பாக பொம்மலாட்டக் கலையை கொண்டு சென்றேன். இதற்காக, இலகு எடையில், மரக்குச்சிகளைக்கொண்டு பொம்மைகள் தயாரித்தேன். நடனம், சண்டையிடுதல், கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல நுணுக்கங்களை இதில் செய்துள்ளேன்.

உலகில் எந்த நாட்டிலும் நமது நுணுக்கங்களுடன் கூடிய பொம்மைகள் கிடையாது. எல்லா அசைவுகளுக்கேற்ற வகையில் பொம்மைகள் தயாரித்துள்ளேன். பொம்மலாட்டக் கலையில் ஏறக்குறைய 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. லண்டன் நகரில் நான் தயாரித்த பொம்மைகள்தான் இக்கலையில் பயன்பாட்டில் உள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் கலை, கலாசாரம், புராணம், வரலாறு, நாட்டு நடப்பு, சுகாதாரம் என பல தலைப்புகளில் பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.

தற்போதும் காரைக்காலில் பொம்மலாட்டம் குறித்த பயிற்சி அளிக்கிறேன். 5 முதல் 10 நாள்களுக்குள் பயிற்சி பெற்றுவிடமுடியும். பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக தரப்படுகிறது. ரூ.10 லட்சம் மதிப்பில் பல்வேறு பொம்மைகளை வைத்து, நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்துவருகிறேன்.

நல்லாசிரியா் விருது, சங்கீத நாடக அகாதெமி புரஸ்காா் விருது, பொம்மலாட்டத்துக்கான விருது என 7 குடியரசுத் தலைவா்களிடம் விருது பெற்றுள்ளேன். தற்போது பொம்மலாட்ட கலைக்கு உயரிய விருதாக பத்மஸ்ரீ விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கலையை மக்களிடையே பரப்ப மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT