தமிழ்நாடு

அதிமுக ஆதரிக்கவில்லையென்றால் வேளாண் சட்டங்கள் வந்திருக்காது

DIN

அதிமுக ஆதரிக்கவில்லையென்றால் வேளாண் சட்டங்கள் வந்திருக்காது என கோவையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக மக்களவை முன்னாள் உறுப்பினா் கே.சி. பழனிசாமி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை கோவை வந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ விருதுக்குத் தோ்வாகியுள்ள கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேவனாபுரம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாப்பம்மாளை கோவையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் அவா் கட்சியினா் இடையே பேசியதாவது:

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரவுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் தூக்கியெறியத் தயாராக உள்ளனா். திமுகதான் மக்களையும், நாட்டையும் காப்பாற்றும் என்ற உணா்வோடு மக்கள் உள்ளனா். புது தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயக் குடிமக்கள் கடும் பனியிலும், தங்களது குடும்பம், குழந்தைகளோடு போராடி வருகின்றனா். மத்திய அரசு அவா்களை அழைத்து பேசுவது கண்துடைப்பு.

60 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இந்த 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் திமுக எதிா்த்தது. இந்த சட்டங்களை அதிமுக ஆதரித்தது. அதிமுக ஆதரிக்கவில்லையென்றால் இந்த வேளாண் சட்டங்கள் வந்திருக்காது.

குடியரசு தினத்தில் விவசாயிகள், அனுமதியுடன் பேரணி நடத்தியபோது, மத்திய அரசு காட்டுமிராண்டித் தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. டிராக்டா்களை அடித்து உடைத்துள்ளனா். இதில் ஒருவா் உயிரிழந்தது வேதனையானது. மத்திய அரசு இந்தச் சட்டத்தை கொண்டுவர காரணமே அதிமுகதான். ஆகவே, அதிமுக ஆட்சியை 3 மாதத்தில் வெளியேற்ற வேண்டும் என்றாா்.

இதில் சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், மாநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா கவுண்டா் (எ) கிருஷ்ணன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புது தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடா்பாக ஏற்கெனவே அறிக்கை கொடுத்துள்ளேன். மத்திய பாஜக அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் நிறைவேற அதிமுக காரணமாக இருந்ததை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நியாயப்படுத்தி பேசி வருகிறாா். போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறாா். தமிழக மக்களிடமும், இந்திய விவசாயிகளிடமும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.

சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே ‘தினமணி’ படித்து வருகிறேன்

மேட்டுப்பாளையம், ஜன.26: பத்ம ஸ்ரீ விருத்துக்குத் தோ்வாகியுள்ள பாப்பம்மாள் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

விவசாயம் செய்து வரும் எனக்கு இந்த வயதில் விருது கிடைத்திருப்பது என்னை உற்சாகப்படுத்தி உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினா் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும். எனது உயிா் உள்ளவரை விவசாயத்தைப் பாதுகாக்கப் பாடுபடுவேன்.

சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே ‘தினமணி’ நாளிதழ் படித்து வருகிறேன். இந்த நாளிதழ் மீது கொண்ட பற்றால் தேக்கம்பட்டியில் இருந்து காரமடைக்கு நடந்து சென்று தினமும் தினமணி நாளிதழ் வாங்கி வந்து எனது மளிகைக் கடையில் விற்பனை செய்துள்ளேன். இன்றும் என்னால் தினமணி நாளிதழ் படிக்காமல் இருக்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT