தமிழ்நாடு

விவசாயி என்ற பொய் வேடத்தை முதல்வர் உடனடியாக கலைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

27th Jan 2021 04:11 PM

ADVERTISEMENT

 

சென்னை: விவசாயி என்ற பொய் வேடத்தை முதல்வர் பழனிசாமி உடனடியாக கலைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

டெல்லியில் போராடி வரும் விவசாயப் பெருமக்களுக்கு  ஆதரவாகத் திருவாரூரில் டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள், திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் திரு. பூண்டி கலைவாணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் ஆதரவு ஊர்வலம் நடத்திய  கழகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுவதற்காக, தங்களுடைய  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளை "புரோக்கர்கள்" என்று விமர்சிக்கும் திரு.பழனிசாமி, இப்போது விவசாயிகளுக்காகப் போராடும் தி.மு.க. மீதும், கூட்டணிக் கட்சிகள் மீதும், கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்திருக்கும் திரு. பழனிசாமி, தன்னைத் தானே விவசாயி என்ற பொய் வேடத்தை உடனடியாக கலைத்துக் கொண்டு, உண்மைச் சொரூபத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று -  மூன்று வேளாண் சட்டங்களையும்  ரத்து செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கும் தி.மு.க.வையும் கூட்டணிக் கட்சிகளையும் இதுபோன்ற பொய் வழக்குகள் மூலம் தடுத்துவிட முடியாது என்று முதலமைச்சரை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT