தமிழ்நாடு

குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி திருப்பூர் மண்டல அலுவலகம் முற்றுகை

27th Jan 2021 03:02 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி குமரானந்தபுரம் பகுதி பொதுமக்கள் 1ஆவது மண்டல அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரம் 9 ஆவது வார்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 1 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 

எங்களது பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்தப்பகுதியில் சாந்தி திரையரங்க பேருந்து நிறுத்தமும் உள்ளது. இந்தப் பகுதி வழியாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், சாந்தி திரையரங்கம் எதிர்புறம் உள்ள சுடுகாட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு 3 மாதமாகச் செயல்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

இதனால் எங்களது பகுதியில் ஈ, கொசுத் தொல்லைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்தப் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT