தமிழ்நாடு

நகை கொள்ளை என்கவுன்டர்: நடந்தது என்ன?

27th Jan 2021 12:56 PM

ADVERTISEMENT

 


சீர்காழியில் நகைக்கடை அதிபரின் மனைவி, மகனை கொன்றுவிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தான். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  புதன்கிழமை அதிகாலை காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48 ) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளிவில் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர. அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார். தன்ராஜை தாக்கிய மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த மருமகள் நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் சிடி ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின்  வீட்டு வாசலில் இருந்த காரில் தப்பிச் சென்றது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சீர்காழி துணை காவல் கணிப்பாளர் யுவபிரியா, காவல் ஆய்வாளர் மணிமாறன், சீர்காழி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியை காவல்துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். 

இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காரில் தப்பிச் சென்ற கொள்ளை கும்பல் நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு கிராமப்புற சாலை வழியே தப்பமுயன்றபோது கார் பழுதானது.  இதையடுத்து 
மேலமாத்தூர் செல்லும் பகுதியில் அந்த காரை அங்கேயே விட்டுவிட்டு கிராமப்புற வயல்வெளிகளில் நகைப்பையுடன் தப்ப முயன்ற மூவர் குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். 

தகவலை அடுத்து கொள்ளையர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டிய காவல்துறையினர், விரைந்து வந்த காவலர்கள் எருக்கூர் வயல்வெளியில் தப்பியோடி வடமாநில கொள்ளையர்கள் மூவரையும் பிடித்தனர். அப்போது நகைகளை புதைத்து வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது கொள்ளையர்கள் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். 

இதையடுத்து சுதாரித்துக்கொண்டு காவலர்கள் நடத்திய என்கவுன்டரில் மஹிபால் என்ற கொள்ளையன் உயிரிழந்தான். மற்ற கொள்ளையர்களான மணிஷ், ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் காவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 16 கிலோ நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டதும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மஹிபால், ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் பாட்டீல், மணிஷ், கர்ணாராம் தெரியவந்துள்ளது.  ரமேஷ் பாட்டீல், மணிஷ் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ரமேஷ் பாட்டீல் என்பவன் கும்பகோணத்தில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை கடையிலும், மணிஷ் என்பவன் ஜெயங்கொண்டத்தில் உள்ள மரக்கடை ஒன்றில் வேலை செய்துவந்த தெரியவந்துள்ளது. 

கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் நகைக்கடை அதிபர் தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மருமள் நிகில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT