தமிழ்நாடு

மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் கோவிந்தா கோஷம் முழங்கத் தேரோட்டம்

27th Jan 2021 01:32 PM

ADVERTISEMENT

 

சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் "கோவிந்தா' கோஷம் முழங்க புதன்கிழமை மதியம் தேரோட்டம் நடைபெற்றது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும் "மேல் திருப்பதி' எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில் தை தேர்த் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள்

தினமும் சிறப்புப் பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றது. புதன்கிழமை மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, "கோவிந்தா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேவூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவில் வியாழக்கிழமை பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 

திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஒரு பகுதி

வெள்ளிக்கிழமை காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. சனிக்கிழமை மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.  

தேர்த் திருவிழா ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ச.சரவணன், பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் து.ராமமூர்த்தி, அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT