தமிழ்நாடு

அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியிருக்காது: மு.க. ஸ்டாலின்

26th Jan 2021 04:10 PM

ADVERTISEMENT

அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

மத்திய அரசின் அணுகுமுறையே தில்லியில் விவசாயிகளின் போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

 

ADVERTISEMENT

தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். 

தில்லி - சிங்கு எல்லை, ஹரியாணா- திக்ரி எல்லை, உத்தரப்பிரதேசம் - காசியாபாத், ராஜஸ்தான் - ஷாஜஹான்பூர், பஞ்சாப் - லூதியானா ஆகிய 5 மாநில எல்லைகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் நடந்தும், டிராக்டர்களிலும் மத்திய தில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். 

தில்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தடுப்புகளை மீறி விவசாயிகள் தற்போது தில்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர். 

இதனால் தில்லி முழுவதும் வன்முறைக் களமாக காட்சி அளிக்கிறது. விவசாயிகளின் பேரணியைத் தடுக்கும்பொருட்டு, முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைய சேவை துண்டிப்பு, 144 தடை உத்தரவு, விவசாயிகளின் மீது தடியடி என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT