தமிழ்நாடு

ஜன.27-ஆம் தேதி கோயில்கந்தன்குடி முருகன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

26th Jan 2021 10:26 AM

ADVERTISEMENT

 

நன்னிலம்: கோயில்கந்தன்குடி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள புகழ்பெற்ற கோயில் கந்தன்குடி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி புதன்கிழமைக் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 

அன்னை பராசக்தி அம்மன், அம்பரன் என்ற இரண்டு அசுரர்களையும் சம்ஹாரம் செய்யும் பொருட்டு, காளி ரூபம் ஏற்று செல்லும்போது குழந்தையாகிய ஸ்ரீகந்தனும் உடன் வருகிறார். அசுரர்களை அழிக்கச் செல்லும் போது குழந்தை தன்னுடன் வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஸ்ரீகந்தனை, இந்த தலத்தில் தங்குமாறு பராசக்தி ஆணையிட, அதன்பேரில் ஸ்ரீகந்தன் தங்கிய இந்த இடம், கோயில்கந்தன்குடி என்று அழைக்கப்படுகிறது.  இந்த தலத்தில் ஸ்ரீதேவசேனா ஸ்ரீமுருகப் பெருமானை மணக்கோலம் கொள்ள, தவம் பூண்டதன் காரணமாக, ஸ்ரீதேவசேனாவிற்குத் தென்திசை நோக்கிய தனி சன்னதி உள்ளது. 

ADVERTISEMENT

 

தேவேந்திரன் தனது மகளின் தவத்தைக் காக்கும் பொருட்டு, இங்கு ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக, இரண்டு தந்தங்களுடைய வெள்ளையானை வாகனமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. 

இத்திருக்கோயில் 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பொது நிதியிலிருந்து ரூபாய் 37.5 லட்சம் ஒதுக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

கோயில் கந்தன்குடி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீதேவசேனா உள்ளிட்ட 10 சன்னதிகளுக்கும், உபயதாரர்கள் சார்பாக ரூபாய் 25 லட்சம் செலவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஜனவரி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமைக் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேகத்தையொட்டி ஜனவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமைக் காலை மங்கள இசையுடன் திருமுறைத் துவக்கம், அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, சனிக்கிழமைக் காலை கணபதி ஹோமம், மாலை பிரவேச பலி,  ரக்ஷேக்ன ஹோமம், வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்கிரஹனம் நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமைக் காலை நவக்கிரஹஹோமம், அஸ்த்ரஹோமம்,  ப்ரதான ரக்ஷாபந்தனம், தீர்த்த ஸங்கிரஹணம், அக்நி ஸங்கிரஹணம், பரிவார கலாகர்ஷணம் நடைபெற்று மாலை 4 மணியளவில் ப்ரஸன்னாபிஷேகம், கும்ப அலங்காரம், யாகசாலைப் பிரவேசம் நடைபெற்றது. 

கோயில் கந்தன்குடி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலைப் பூஜைக்காக யாகசாலைப் பிரவேசம் நடைபெற்ற போது எடுத்த படம்.


ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கால யாகசாலைப் பூஜை, ஹோமங்கள், த்ரவ்யாஹுதி,  பூர்ணாஹுதி நடைபெற்றுத் தீபாராதனை நடைபெற்றது.  திங்கட்கிழமை இரண்டாம் கால யாகசாலைப்பூஜை, அஷ்டபந்தன மருந்து முகூர்த்தம் செய்தல்,  மாலை மூன்றாம் கால பூஜை, விசேஷ சந்தி, செவ்வாய்க்கிழமைக் காலை நான்காம் கால பூஜை, மாலை ஐந்தாம் கால பூஜை, தம்பதி பூஜை, லெக்ஷ்மி பூஜை, கன்யா பூஜை, இரவு ஹோமங்கள் தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்துக்குத் தயாராக உள்ள கோயில்கந்தன்குடி கோபுரங்கள். 

ஜனவரி 27ஆம் தேதி புதன்கிழமைக் காலை ஆறாம்கால பூஜை,  கோ பூஜை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், ஹோமங்கள் நடைபெறும். காலை 8 மணி அளவில் யாத்ரா தானம் நடைபெற்று கலசங்கள் புறப்பாடும் 9.05 மணி அளவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகமும், 9.30 மணி அளவில் மூலவர் கோபுரக் கும்பாபிஷேகமும் நடைபெறும்.  மாலை 4.30 மணி அளவில் மஹா அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடைபெற்று இரவு 8.30 மணியளவில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோயில் எழுத்தர் ரேவதி, மேலாளர் க.வள்ளிகந்தன், செயல் அலுவலர் மு.முருகையன், தக்கார் பா.பிரபாகரன் மற்றும் திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்களும், திருப்பணி உபயதாரர்களும்,கோயில் பணியாளர்களும், கிராம முக்கியஸ்தர்களும் சிறப்பாகச் செய்து வருகின்றனர். 
 

Tags : temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT