தமிழ்நாடு

திருவள்ளூரில் 2.14 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்

26th Jan 2021 02:27 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72-ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி வைத்து ரூ.2.14 கோடியில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறை அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 72}ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்கள், புறாக்களை பறக்க விட்டு, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தோர் மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாக பணிப்புரிந்த 120-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களையும் வழங்கினார்.

ADVERTISEMENT

அதையடுத்து இவ்விழாவில் வேளாண்மைத்துறை சார்பில் 2 பேருக்கு மானிய விலையில் ரூ.29500 மதிப்பில் விசைத்தெளிப்பான், ஊக்கத்தொகை விருது, காசோலை, தோட்டக்கலைத்துறை மூலம் 2 பேருக்கு பசுமைகுடில், மிளகாய் நாற்றுக்கள் மானிய விலையில் ரூ.9.60 லட்சத்திலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒருவருக்கு மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் ரூ.27.90 லட்சம், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2 பேருக்கு முழு மானியத்தில் விலையில்லா கறவை பசுக்கள் ரூ.78400 மதிப்பிலும், வேளாண் அறிவியல் நிலையம் மூலம் ஒருவருக்கு காய்கறி விதை மற்றும் மரக்கன்றுகள் ரூ.200 மதிப்பிலும், மீன்வளத்துறை மூலம் 3 பேருக்கு வண்ணமீன் வளர்ப்பு, உரிமையாளர் பராமரிப்பு பணி ஆகியவற்றை மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன், தாட்கோ திட்டத்தில் 3 பேருக்கு 2 பயணியர் வாகனம், ஆட்டோ ஆகியவைகள் ரூ.19.19 லட்சத்திலும், முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் ஒருவருக்கு போர் விதவையர், ஊனமுற்றோக்கான ஆண்டு பராமரிப்பு மானியம் ரூ.25 ஆயிரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பேருக்கு இணைப்புச்சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் ரூ.1.24 லட்சத்திலும், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 8 பேருக்கு ரூ.18.24 லட்சமும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 2 பேருக்கு ரூ.1.21 கோடி தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 2 பேருக்கு ரூ.13.36 லட்சம் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலகுரு மற்றும் பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவில் காவல் துறை அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அப்போது, அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உடன் வந்த ஆயுதப்படை காவலர்கள் தூக்கிச் சென்று தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். அப்போது, அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்க காலையில் முன்னதாகவே வந்ததாகவும், உணவு உட்கொள்ளாமல் இருந்ததுதான் மயக்கத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT