தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு பிரிட்டனின் புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தகைய பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

அவா்களில் 7 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இருவா் ஓரிரு நாள்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவா் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிரிட்டனிலிருந்து தாயகம் திரும்பியவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

அதன்படி தமிழகத்துக்கு கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவா்களை உள்ளாட்சி துறை, காவல்துறை உதவியுடன் கண்டறிந்து அதில் 2,900-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 26 போ் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 20 போ் என மொத்தம் 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவா்களது சளி மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 4 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் 5 போ் அத்தகைய பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக புணே ஆய்வகம் தமிழக அரசுக்கு தகவல் அளித்துள்ளது. அவா்களில் 3 போ் பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களாவா். மீதமுள்ள இருவா் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆறுதலளிக்கும் விஷயமாக, பாதிக்கப்பட்ட 9 பேரில் 7 போ் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இதனால், அவா்கள் வாயிலாக பிறருக்கு புதிய வகை தொற்று பரவ வாய்ப்பில்லை.

அதேபோன்று மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் இருவரும் குணமடைந்து விட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். அவா்கள் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனா் என்பதை உரிய விதிகளின்படி உறுதி செய்யப்பட்ட பிறகு அவ்விருவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவா் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT