தமிழ்நாடு

வேலூர் தங்கக் கோயிலில் கும்பாபிஷேகம்: 1,700 கிலோ வெள்ளி விநாயகர் பிரதிஷ்டை

DIN

வேலூர் தங்கக் கோயில் வளாகத்தில் உலகிலேயே முதன்முதலாக 1.700 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஸ்ரீ புரத்தில் ஸ்ரீநாராயணி பீடத்துக்குச் சொந்தமாக 1,500 கிலோ தங்கத்திலான பொற்கோயில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் 700 டன் கருங்கற்களால் கட்டப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த கற்கோயிலில் மூலவராக உலகிலேயே முதன் முதலாக 1700 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட ஐந்தரை அடி உயரமுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 15-ம் தேதி முதல் தமிழ் முறைப்படி ஒரு லட்சத்து 8 ஆயிரம் நவதானிய லட்டுகளைக் கொண்டு யாகம் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, கடந்த 3 நாள்களாக வேத ஆகம முறைப்படியும் யாகங்கள் நடத்தப்பட்டு அவற்றின் புனிதநீரைக் கொண்டு இந்த சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை நாராயணி பீடம் சக்தி அம்மா நடத்தி வைத்தார்.

விழாவில், மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். தவிர, பாலமுருகனடிமை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பொற்கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமி மூலவராக அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு இக்கோயிலில் 70 கிலோ தங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசுவர்னலட்சுமி சிலைக்கு அனைத்துத் தரப்பு பக்தர்களும் தங்களது கைகளாலேயே அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, சுமார் ரூ.16 கோடி செலவில் இந்த சக்தி விநாயகர் ஆலய நிர்மாணம், வெள்ளி விநாயகர் வடிவமைப்பும் செய்யப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருப்பதாகவும் சக்தி அம்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT