தமிழ்நாடு

பாஜக வேட்பாளர்கள் அதிகம் அளவில் வெற்றிபெற்று பேரவைக்கு செல்வார்கள்: எல்.முருகன்

DIN

ராசிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிகம் பேர் வெற்றி பெற்று பேரவைக்கு  செல்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார். 

நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் அணி பிரிவு மாநாட்டிற்கு வருகை தந்த அவருக்கு ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பாஜக  தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலர் வி.சேதுராமன், மாவட்டச் செயலர் எஸ்.ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. வருகின்ற 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பாஜக மிகப்பெரிய அளவில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. பாஜக வேட்பாளர்கள் அதிக அளவில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெறுவார்கள். 

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பல்வேறு தரப்பினர் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மோடி அவர்களின் ஆற்றல் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

வேல் யாத்திரையை குறைகூறிய ஸ்டாலினை வேல் எடுக்க வைத்துள்ளார் முருக கடவுள்: 

ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் எங்கள் பாஜகவின் வெற்றி வேல் யாத்திரையை குறை கூறினார்கள். வேல் எடுத்து அரசியல் செய்கிறார் என கிண்டல் செய்தனர். ஆனால் இன்று அதே தை கிருத்திகை நாளில் பாஜக எங்கு வேல் எடுத்ததோ அதே இடத்தில் கையில் வேல் எடுக்க வைத்துள்ளார் முருக கடவுள். கோவிலுக்கு போகமாட்டோம் என சொன்னவர்களிடம் ஒரே மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம். திமுகவை வரும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலை விட்டே விரட்டியடிப்போம்.

வேல் யாத்திரை தமிழகத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாநில பாஜக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்தது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதற்கு தமிழக அரசுக்கு  நன்றி, பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து மத வழிபாட்டை தவறாக பேசியவர்களுக்கு உரிய பாடம் வேல் யாத்திரை மூலம் புகட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. வருகின்ற 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவின் தேர்தலாக அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் தமிழகத்திற்கு ஆட்சி அமைக்க பாஜக மிகப்பெரிய அளவில் தேர்தல் பணியாற்ற உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் பேசியது: பாஜக மாநிலத்தலைவர் முருகனை வரவேற்க கூடிய உள்ள கூட்டத்தை பார்க்கும் போது, பாஜக எந்த அளவிற்கு எழுச்சி பெற்றுள்ளது என்பது தெரிகிறது. எங்கே இருக்கிறது பாஜக என கேட்டவர்கள், இந்த கூட்டத்தில் வந்து பார்க்கட்டும். திமுக செய்த அராஜகம், அட்டூழியம், ஊழல் போன்றவற்றின் காரணமாக இனி யார் தமிழகத்தில் வரக்கூடாது என சொல்வதற்காக பாஜக எழுச்சியோடு புறப்பட்டுவிட்டது என்றார்.

தமிழக பாஜக தலைவராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எல். முருகன் பொறுப்பேற்று கட்சி நிகழ்ச்சியில் முதன் முதலாக அவர் பங்கேற்றிருப்பது நாமக்கல் மாவட்ட பாஜக-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து அதிக அளவிலான தொண்டர்கள் பங்கேற்று வாணவேடிக்கை முழங்க, மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் கட்சி கொடியை ஏற்று வைத்தார். 

எல்.முருகன் முன்னிலையில் ஏராளமானோர் புதியதாக கட்சியில் இணைந்துக்கொண்டனர். இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான புவனேஸ்வரி ஹரிஹரன், ஒன்றிய செயலர்கள் லட்சுமணன், ஏ.கே.பாஸ்கர், செல்வகுமார், ராசிபுரம் நகர பாஜக தலைவர் மணிகண்டன், நகர செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT