தமிழ்நாடு

சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும்: ராமதாஸ்

23rd Jan 2021 04:43 PM

ADVERTISEMENT

சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கக்கூடிய  சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. மிக முக்கியமான நெடுஞ்சாலையைத் திறக்காமல், முடக்கி வைத்திருப்பது மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.

நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த சாலைப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக அதன் திறப்பு விழாவை தாமதப்படுத்துவது சரியல்ல. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வரும் சரக்கு ஊர்திகளும், திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களும் சென்னை மாநகருக்குள் நுழையாமலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும். இதன் மூலம் சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை  உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : Ramadoss
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT