திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலைத் தீயணைப்பு வீரர்கள் சனிக்கிழமை மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அருகேயுள்ள கீழமறவன் குடியிருப்பைச் சேர்ந்த சுதர்சன் என்பவரின் மகன் ஜோதிமணி(17). இவர், கோணம் பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சீவலப்பேரியிலுள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்த அவர், அருகில் உள்ள தாமிரவருணி ஆற்றில் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துள்ளார். அப்போது, ஜோதிமணி மற்றும் அவரது நண்பர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று கரைதிரும்ப முடியாமல் தத்தளித்துள்ளார். இதில், ஜோதிமணி தவிர மற்ற நண்பர்களை ஆற்றில் குளித்தவர்கள் மீட்டனர்.
இது குறித்து கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கங்கைகொண்டான் நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஜோதிமணியை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரமாகியும் மாணவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மாணவரைத் தேடும் பணி தொடங்கியது. அப்போது, மாணவர் ஜோதிமணி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதையடுத்து, சீவலப்பேரி காவல்துறையினர் ஜோதிமணி உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.