தமிழ்நாடு

சசிகலா நலம்பெற வேண்டி அலகு குத்தி மெளன விரதம்: போலீஸார் தடையால் பாதியில் நிறுத்தம் 

23rd Jan 2021 12:41 PM

ADVERTISEMENT


திருச்சி: சசிகலா நலம் பெற வேண்டி திருச்சியில் அமமுக நிர்வாகி அலகு குத்தி மெளன விரதம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண நலம் பெற வேண்டியும், மீண்டும் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்று முதல்வராக வர வேண்டியும் திருச்சி வழிவிடு வேல்முருகன் கோவிலில் இந்த நேர்த்திக் கடன் செலுத்தப் போவதாக ஒத்தக்கடை வி. செந்தில் (51) அறிவித்திருந்தார்.

1981 ஆம் ஆண்டு முதல் அதிமுக-வில் இயங்கி வந்த இவர், அமமுக தொடங்கிய பிறகு அக்கட்சியின் எம்ஜிஆர் மன்ற திருச்சி மாநகர் மாவட்ட இணைச் செயலராக பணியாற்றி வருகிறார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் நலம் பெற வேண்டி, திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை அலகு குத்தி மெளன விரதம் தொடங்கினார். கோவில் வாயில் முன்பாக அலகு குத்தியபடி, தனது வேண்டுதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி மெளன விரதத்தை தொடங்கினார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், கரோனா தடை காலத்தில் அனுமதி பெறாமல் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என எச்சரித்தனர். இல்லையெனில் கைது செய்வதாகவும் கூறினர். 

ADVERTISEMENT

இதையடுத்து, தனது மெளன விரதத்தை தொடங்கிய ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக, ஒத்தக்கடை வி. செந்தில் கூறியது:
எனது திருமணத்தை சசிகலாவின் கணவர்தான் நடத்தி வைத்தார். அதிமுக-வில் ஜங்ஷன் பகுதி கழக பொருளாளராக பணியாற்றினேன். அமமுக தொடங்கிய பிறகு சசிகலாவுக்கு ஆதரவகாக பணியாற்றி வருகிறேன். காவல்துறையின் அடக்குமுறையால்தான் தனது நேர்த்திக்கடன் தடைபட்டுள்ளது. மெளன விரதம் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அலகு குத்தி நான் செலுத்திய நேர்த்திக்கடனால் சசிகலா பூரண குணமடைந்து தமிழகம் திரும்புவார் என்றார். 

இந்த சம்பவத்தால், கோவில் வளாகத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. அலகு குத்தியபடி நின்ற செந்திலை, கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Tags : Silent stabbing  Sasikala well-being
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT