தமிழ்நாடு

கோவை வந்தார் ராகுல் காந்தி: தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்

23rd Jan 2021 11:52 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கோவைக்கு வருகை தந்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில், அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜனவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்களில் 3 நாள்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட, இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

ADVERTISEMENT

இன்று காலை 11 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்துள்ள அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து காலை 11.35 மணிக்கு காளப்பட்டி சந்திப்புப் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. அவர் ஆங்கிலத்தில் பேசியதை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழில் மொழிபெயர்த்தார்.

பிறகு காளப்பட்டியில் உள்ள சுகுணா மண்டபத்தில் சிறு, குறு தொழில்முனைவோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேச உள்ளாா். பின்னா் அங்கிருந்து திருப்பூா் செல்லும் அவருக்கு சின்னியம்பாளையம் சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து திருப்பூா் புதிய பேருந்து நிலையம், அனுப்பா்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னா் திருப்பூா் குமரன் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்துகிறாா். இதையடுத்து மாலை 5.45 மணிக்கு திருப்பூா், ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழிலாளா்களைச் சந்திக்கிறாா். முதல் நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பூரில் உள்ள பொதுப் பணித் துறை விடுதியில் தங்குகிறாா்.

ஜனவரி 24ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்படும் ராகுல் காந்திக்கு காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளியிலும், 11.15 மணிக்கு பெருந்துறையிலும், 12.30 மணிக்கு பி.எஸ்.பாா்க் பகுதியிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னா் ஈரோட்டில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். மாலை 3 மணியளவில் நெசவாளா்களுடன் கலந்துரையாட உள்ளாா். இதையடுத்து மாலை 4.45 மணிக்கு தாராபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

ஜனவரி 25ஆம் தேதி காலை 10 மணிக்கு தாராபுரத்திலிருந்து புறப்படும் அவருக்கு கரூா் மாவட்டம், சின்ன தாராபுரம், கரூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பகல் 12 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை ஈரோடு மாவட்டம், வாங்கல் பகுதியில் உள்ள மாரி கவுண்டம்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்துப் பேசுகிறாா். அன்று மாலை 3 மணிக்கு கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியிலும், 4.15 மணிக்கு, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலும் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மதுரை செல்லும் அவா் அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்படுகிறாா்.
 

Tags : congress rahul gandhi coimbatore election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT