தமிழ்நாடு

திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயிலில் ஜன.25ல் குடமுழுக்கு

23rd Jan 2021 03:47 PM

ADVERTISEMENT

 

நன்னிலம் அருகே உள்ள திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 25ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கொண்டீஸ்வரத்தில், புகழ்பெற்ற சுயம்பு ஈஸ்வரன் கோயில் உள்ளது.  இக்கோயில் ஸ்ரீசாந்தநாயகி உடனுறை ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. கயிலைக்கு இணையாகப் புராணங்களில் போற்றப்படுகின்ற இந்த ஸ்தலத்தைப் பற்றி திருநாவுக்கரசு சுவாமிகள் ஷேத்திர கோவையில் சிறப்புறப் பாடியுள்ளார். பல சிவ ஸ்தலங்களில் சிவபெருமான் தானே எழுந்தருளி அருள்புரிந்து வருகிறார்.

இவ்வாறு பெருமை பெற்ற ஸ்தலங்களில் கேதாரம், காளகஸ்தி, கீழ்வேளுருக்கு அடுத்தப் புதுச்சேரி, சிறுகுடி உள்ளிட்ட அதி சுயம்பு ஸ்தலங்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படுவதுமான, திருக்கொண்டீஸ்வரம், காவிரியின் கிளை நதியாக உள்ள முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி, வலிவலம், திருப்புகலூர், கோயில்கிளியனூர், திருத்தேவன்குடி போன்ற புகழ் பெற்ற ஸ்தலங்கள் அகழியால் சூழப்பட்டிருப்பதுபோல், நீர்நிலையால் சூழப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குடமுழுக்கு விழாவிற்குத் தயாராக உள்ள திருக்கொண்டீஸ்வரம் ஸ்ரீசுயம்பு ஈஸ்வரன் கோயில்.

கிருஷ்ணாரண்யம் 32ல் ஒரு ஸ்தலமாகவும், நன்னிலம் ஈங்கோய்மலை, கந்தன்குடி, உள்ளிட்ட மதுவன ஷேத்திரங்கள் ஐந்தில் ஒன்றாகவும், பிரகஸ்பதி (குரு) பூஜித்த ஸ்தலமாகவும் உள்ளது. கொண்டி என்றால் பசு. அம்பிகை இறைவனைத் தேடி பசுவாகிக் கொம்பால் உழுதபோது, வில்வ மரத்தடியில் இருந்த லிங்க உச்சியில் கீறல் விழ, பசு வடிவில் இருந்த அம்பிகை, பால் சுரந்து லிங்கத்தின் காயம் ஆற்றிய ஸ்தலம். லிங்கம் இரு பிளவாக இருப்பதாலேயே, அது சுயம்புத் ஸ்தலங்களில் ஒன்றாக இந்த ஸ்தலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை வியாழன் எமகண்டத்தில் ஒவ்வொரு வருடமும் விழா எடுக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.

இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலின் குடமுழுக்கு விழா, 1963ஆம் ஆண்டு நடைபெற்று பின்னர் சிதிலமடைந்த நிலையில் இருந்ததைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு கோயில் குடமுழுக்கு விழாவுக்கானத் திருப்பணிகள் துவங்கி நடைபெற்று, ஜனவரி 25ஆம் தேதி திங்கள்கிழமைக் காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் ஸ்ரீபசுபதீஸ்வரர்.

இத்திருக்கோயிலில் உள்ள விநாயகர், முருகன், மகாலெக்ஷ்மி, சோமாஸ்கந்தர், நடராஜர், அம்பாள், ஈஸ்வரன், சண்டிகேஸ்வரர் உட்பட 13 சன்னதிகள் ரூபாய் 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு இந்து அறநிலையத்துறைத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலின் குடமுழுக்கு பற்றி செயல் அலுவலர் ம.ஆறுமுகம் தெரிவித்ததாவது, 

ஜனவரி 25ஆம் தேதி திங்கள்கிழமை காலை நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவினையொட்டி, ஜனவரி 17ஆம் தேதி கோபூஜை, அஷ்டாங்க அனுக்ஞை, விப்ர அனுக்ஞை, ஸ்ரீவிநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள்கிழமை நவக்கிரக ஹோமம், ஸ்ரீவாஸ்துசாந்தி, பூர்ணாஹுதி, செவ்வாய்க்கிழமை சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம்,புதன்கிழமை திஸாஹோமம், கிராம சாந்தி, கிராமப் பரிவார சுவாமி ஆராதனை, வியாழக்கிழமை மூர்த்தி ஹோமம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம் நடைபெற்றது. 

வெள்ளிக்கிழமைக் காலை 7 மணிக்கு ஸ்ரீ தேனு பூஜை, ஸ்ரீ ஸோமகும்ப பூஜை, பரிவார கலாகர்ஷணம், கும்ப அலங்காரம், யாகசாலைப் பிரவேசம், யாகமண்டபம் ஆராதனை,  பூர்ணாஹுதி, யாகசாலை முதல் கால பூஜை கால பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை யாகசாலைப் பூஜையின் இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜையும், ஞாயிற்றுக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலைப் பூஜையும், மேலும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் வேத ஆகமப் படியும் பூஜை நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி அளவில் கோபூஜைப் போன்ற பூஜைகள் நடைபெற்று,  9 மணியளவில் மஹா பூர்ணாஹுதி, ஆறாம் கால யாகசாலைப் பூஜை, தீபாராதனை நடைபெறும். 9:15 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், இதனைத்தொடர்ந்து 10 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் சமகால மஹா கும்பாபிஷேகமும், 10.15 மணி அளவில் மூலவர் மஹா கும்பாபிஷேகம் தீபாராதனையும் நடைபெறும். 

 திருக்கொண்டீஸ்வரம் ஸ்ரீசாந்தநாயகி அம்மன்

திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் மகா அபிஷேகமும், 7 மணி அளவில் திருக்கல்யாணமும் இரவு 8 மணி அளவில் சுவாமி அம்பாள் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள ஸ்ரீலஸ்ரீ திருப்புகலூர் குருமகாசன்னிதானம், திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினைத் தக்கார் தா.ராஜ் திலக், செயல் அலுவலர் ம.ஆறுமுகம், கோயில் அர்ச்சகர் கே.வெங்கடேச குருக்கள் ஆகியோர் தலைமையில் திருச்சி ப.அரவிந்த் சிவாச்சாரியார், மயிலாடுதுறை கே.குகன் சிவாச்சாரியார், திருக்கொண்டீஸ்வரம் பா.கைலாச சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT