தமிழ்நாடு

வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்க திறமையில்லாத அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்: கனிமொழி எம்.பி.

DIN


எட்டயபுரம்: வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதற்கு தயாராக இல்லாத, தீர்க்ககூடிய திறமையற்ற இந்த அதிமுக ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப கூடிய நாள் நெருங்கி விட்டது என்றாா் கனிமொழி எம்.பி.

திமுக சாா்பில் ’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

எட்டயபுரத்தில் கூடியிருக்கிற மக்கள் கூட்டத்தையும், எழுச்சியையும், வரவேற்பையும் பார்க்கையில் இது ஒரு வெற்றி மாநாடு போல் உள்ளது. இங்கே இருக்ககூடிய ஆட்சியாளர்கள் திமுகவினரை பயமுறுத்தி விடலாம் என கனவு கொண்டிருக்கிறார்கள். கடம்பூரில், கோவில்பட்டியில் நாங்கள் நடத்தக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து அங்கேயிருக்க கூடிய அமைச்சர் தடை செய்து கொண்டிருக்கிறார். திமுகவினரின் பேனர், கொடிக்கம்பம், போஸ்டர்களை கிழிப்பதற்கு ஒரு அமைச்சர் தேவையா? இப்படிப்பட்ட ஒரு மனப்பான்மையில் மக்களுக்கு பயனில்லாத ஒரு ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 

நான் பாரதியின் வரியை நினைவுபடுத்தி ஒன்றை கூற விரும்புகிறேன். அச்சமில்லை அச்சமில்லை திமுகவை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எதை கண்டும் அச்சமில்லை. அதனால் நாங்கள் மக்கள் பணிகளை, ஜனநாயக கடமைகளை தொடர்ந்து செய்வோம் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன். எங்களை அடக்கி விட வேண்டும். ஓரங்கட்டி விட வேண்டும். பயமுறுத்தி விட வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் நாங்கள் இன்னும் போர்குணத்தோடு உங்களை எதிர்த்து நிற்போம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக அமைதியான தேர்தலாக நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் ஆசையும் விருப்பமும். மு.க. ஸ்டாலினின் ஆசையும் விருப்பமும் அது தான். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு முறை பேசும் போது குறிப்பிட்டார்கள் நீங்கள் எங்கள் கூட்டத்தில் வந்து பிரச்னை செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களேயானால் யாரும் தெருவில் இறங்கி போக முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார். அந்த நிலை வரக்கூடாது என்பது தான் எங்களுடைய விருப்பம்.  ஆனால் அமைதியாக இருக்ககூடிய நாங்கள் போர்க்குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம். இதை எங்கள் கூட்டத்தில் வந்து குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

மக்களுடைய அடைப்படை தேவைகளை தண்ணீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு என எதையுமே சரியாக செய்து தருவதற்கு துப்பில்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்க கூடிய ஆட்சி. 

இந்த கரோனா காலகட்டத்தில் பொது முடக்கத்தினால் நெசவாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து வைக்ககூடிய கோரிக்கை ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை அதிகரித்து தர வேண்டும் என்பது. இதை எதையுமே இந்த ஆட்சி காதில் வாங்கி கொள்ளவே இல்லை. செய்து தரவே இல்லை. திமுக ஆட்சியில் நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதிபட தெரிவிக்கிறேன். சென்றமுறை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட தற்போது வரை நிவாரணம் கிடைக்க வில்லை. இப்படி தொடர்ந்து உழைக்ககூடிய மக்களுக்கு விவசாயிகளுக்கு பெண்களுக்கு எதிரான செயல்பட்டு கொண்டிருக்க கூடிய இந்த ஆட்சியை நாம் விரைவிலே ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விஜயன் என்ற இளைஞர் 8 மாடுகளை பிடித்து அவரை வெற்றி வீரராக அறிவிக்கிறார்கள். அவருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பரிசு வழங்குகிறார். ஆனால் முதல்வர் மேல் அந்த விஜயன் என்பவருடைய அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை மரியாதை இருந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே அதை கொண்டு போய் உரசி பார்த்து இருக்கிறார். உரசி பார்க்கையில் அது தங்க காசு இல்லை. செம்பு காசு, தகர காசு, செல்லா காசு, பயனற்றது என தெரியவந்துள்ளது. ஒரு முதல்வர் எப்படி தகரத்தை தங்கம் என்று பரிசாக தந்தாரோ அதை போல தன்னை வெற்றி நடை போடக்கூடிய தமிழ்நாடு என்று மக்களிடம் ஏமாற்றி விற்று விடலாம் என்று கனவு கொண்டிருக்கிறார். மக்கள் ஏமாற தயாராக இல்லை.

திமுக ஆட்சி காலத்தில் வீடு வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் பேருக்கு கான்கீரிட் வீடுகள் வழங்கப்பட்டன. அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்ட அரசு, தற்போது விவசாயிகளுக்கு, தொழிலாளா்களுக்கு வீடுகளை வழங்குவோம் என கூறுகிறது. இன்னும் 3 மாதத்தில் நீங்கள் வீட்டுக்கு போகப்போகிறீர்கள். நீங்களே வீட்டுக்கு போகும் போது நீங்கள் எப்படி வீடு வழங்குவீர்கள். நிச்சயமாக செய்யமாட்டீர்கள். பத்து வருஷமா செய்யாததை, செய்திட முயற்சிக்காத ஒன்றை நிச்சயமாக செய்ய மாட்டீர்கள். இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சி மலரும். அப்போது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். முதியோா், மாற்றுதிறனாளிகள்,விதவைகளுக்கு உதவித்தொகை கிடைக்கச்செய்வோம். விவசாயிகள், தொழிலாளா்களின் நலனை பாதுகாப்போம். 

மக்களை ஏமாற்றி விடலாம் என தினமும் விளம்பரம் கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசிடம் பணமில்லை என்கிறீர்கள். ஆனால் மக்களுடைய வரிப்பணத்தில் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் அதிமுகவுக்கு விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதற்கு தயாராக இல்லாத, தீர்க்ககூடிய திறமையற்ற இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப கூடிய நாள் நெருங்கி விட்டது. கருணாநிதி ஆட்சி எப்படி மக்களுடைய ஆட்சியாக இருந்ததோ அதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற, விவசாயிகளை, தொழிலாளர்களை தாங்கி பிடிக்கிற ஆட்சியாக கருணாநிதி அளித்த மக்கள் ஆட்சியை போல் ஒரு ஆட்சியை மு.க. ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார் என்றார் கனிமொழி எம்.பி.

கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், சின்னமாரிமுத்து, மும்மூா்த்தி, செல்வராஜ், முருகேசன், பேரூா் செயலா்கள் பாரதி கணேசன், வேல்சாமி, மருதுபாண்டி, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT