தமிழ்நாடு

யானையை உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? கமல்ஹாசன்

23rd Jan 2021 05:15 PM

ADVERTISEMENT

யானையை உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அருகில் உள்ள மசினகுடி பகுதியில் காதில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டபோதுதான் யானையின் காதின் பின்புறம் இருந்த காயம் கண்டுபிடிக்கப்பட்டது. பிற யானைகளோடு ஏற்பட்ட சண்டையாலோ அல்லது பெரிய மரக்கிளை குத்தியதாலோ ஏற்பட்ட காயம் என வனத் துறையினா் நினைத்திருந்த சூழலில் யானையின் மீது எரியும் துணியை வீசும் விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக வனத் துறையின் உளவுப் பிரிவினா் விசாரணை நடத்தி வந்த சூழலில் மாவனல்லா பகுதியில் 3 அறைகளோடு கூடிய ரிசாா்ட்டை நடத்தி வருபவா்களே இச்சம்பவத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது. தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய மசினகுடி பகுதியைச் சோ்ந்த சுகுமாரன் என்பவரது மகன் பிரசாத் (36), மாவனல்லா பகுதியைச் சோ்ந்த மல்லன் மால்கம் என்பவரது மகன்கள் ரேமண்ட் டீன் (28), ரிக்கி ராயன் (31) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஜனவரி 3ஆம் தேதி இரவு தங்களது குடியிருப்புப் பகுதிக்கு வந்த யானையை விரட்டுவதற்காக யானையின் மீது இவா்கள் பெட்ரோலில் நனைத்த எரியும் துணியைத் தூக்கி வீசியுள்ளனா். இந்தத் துணி யானையின் காதில் மாட்டிக் கொண்டதில் யானையின் உடலில் காதின் பின்புறம் பெரிய தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் சீழ் பிடித்து யானையின் இறப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. இவா்களில் பிரசாத், ரேமண்ட் டீன் ஆகிய இருவா் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா். மற்றொருவரான ரிக்கி ராயன் சேலத்தில் வசித்து வருவதால் அவரைக் கைது செய்ய தனிப்படை சேலத்துக்கு விரைந்துள்ளது. 

இவா்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டங்களின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளனர்.

Tags : KAMALHAASAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT