தமிழ்நாடு

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோருவது பாமகவின் தேர்தல் நேர நாடகம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

23rd Jan 2021 12:17 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: கடந்த 2 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு குறித்து பேசாமல் இருந்த பாமக, தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தேர்தல் நேர பேரத்திற்காகவே இட ஒதுக்கீடு விவகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:  அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு எந்த பலனும் இல்லை. வன்னியர்களின் ஓட்டை வாங்கிக்கொண்டு அதிமுக ஆட்சி செய்கிறது. பாமக மீது அதிமுகதான் வழக்குப் போட்டது. அதை ரத்து செய்தது திமுக. இட ஒதுக்கீடு அளித்தது திமுக. தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள் ஒதுக்கீடு என பாமக தலைவர் ராமதாஸ் கூறுவது, தேர்தலுக்காக  பேரம் பேசுகிறார்கள் என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. 

அதிமுகவால்  வன்னியர்களுக்கும், பாமகவுக்கும் எந்த பலனும் இல்லை. மக்களவைத் தேர்தல் நடந்து 2 வருட காலத்தில் இட ஒதுக்கீடு குறித்து ராமதாஸ் ஏன் பேசவில்லை. இடைத்தேர்தலில் பாமக, அதிமுகவை ஆதரிக்கும்போது ஏன் இட ஒதுக்கீடு குறித்து பேசவில்லை. இப்போது ஆட்சி முடியும் தருவாயில் பாமக நாடகமாடுகிறது. வன்னியர் சமூகத்திற்கு பாமக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது. வன்னியர்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். தேர்தலில் பேரம் பேசுவதற்காக இட ஒதுக்கீடு விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரி என அறிவித்துவிட்டு அதிக கல்வி கட்டணம் வாங்குகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த கல்லூரியில் படித்தவர். அவருக்கும் இந்த கல்லூரி மீது அக்கறை இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு எடுத்தது. ஆனால் எந்த நன்மையும் செய்யவில்லை. கடலூரில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை முடக்கவே இந்த பல்கலைக் கழகத்தை அரசு எடுத்ததோ என்ற சந்தேகம் எழுகிறது. மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனியாருக்கு சென்று விடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

திமுக நடத்திய மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் திமுக மீது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை வந்திருக்கிறது. இந்த கிராமசபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கின்றனர். சிறு துளியாக தொடங்கிய இந்த கிராம சபை கூட்டம் பெரிய வெள்ளமாக மாறி இருக்கிறது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags : Demanding reservation MRK Panneerselvam PMK election time drama x
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT