தமிழ்நாடு

பெண்களை அரண் போல் காக்கின்ற அரசு அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

23rd Jan 2021 10:11 PM

ADVERTISEMENT

பெண்களை அரண் போல் காக்கின்ற அரசு அதிமுக அரசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார். அப்பாவி பெண்களை திமுக நிர்வாகிகள் அழைத்து வந்து, இப்படி தான் பேச வேண்டும் என்று கூறி அமரவைத்து, பேச வைக்கின்றனர். எங்கள் ஆட்சி காலத்தில், எந்த திட்டமும் நடைபெறவில்லை என்று கூறுகிறீர்கள். தற்போது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு வருகிறீர்கள். 
நீங்கள் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தீர்கள், அப்போது பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டதுண்டா. இல்லை. அப்போது எல்லாம் உங்களுடைய வீட்டு மக்களுடைய தேவைகளை தான் பார்த்து கொண்டிருந்தீர்கள். மக்களின் கோரிக்கைகளை பார்க்கவில்லை. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் இப்போது விழிப்போடு இருக்கிறார்கள். 
மீண்டும் அண்ணா திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எண்ணி விட்டார்கள். ஸ்டாலின் ஒருமுறை மக்களை ஏமாற்றலாம், எப்பொழுதும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். யாருக்கு எப்போது வாக்களிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
திமுக நேரடியாக அண்ணா திமுகவை சந்திக்க முடியாமல் கொள்ளைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். 
ஸ்டாலினும், கனிமொழியும், பொள்ளாச்சிக்கு வந்து கூட்டம் நடத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மீது அவதூறான செய்திகளை பரப்பி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றார். உங்களுக்கு தில் இருந்தால் நேரடியாக எங்களோடு மோதுங்கள். பொள்ளாச்சி மண் புனிதமான மண். தயவு செய்து கொச்சைப்படுத்தி பேசாதீர்கள். எதில் எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று விவஸ்தை இருக்கிறது. 
ஆட்சிக்கு வருவதற்கு திமுக என்ன வேண்டுமானாலும் செய்யும். திமுக என்றாலே பித்தலாட்டம் என்று தான் பெயர். அப்படி பித்தலாட்டம் செய்து ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். நீதி, தர்மம் தான் எப்பொழுதும் வெல்லும். என்றைக்கும் பொய் நின்றாக வரலாறு கிடையாது.
நான் மக்களோடு மக்களோடு வாழ்ந்து அனுபவ ரீதியாக வாழ்ந்து வந்திருக்கின்றேன். ஸ்டாலின் ஏழை மக்களை சந்தித்தது கிடையாது, அவர்களோடு பழகியது கிடையாது, அவர்களோடு வாழ்ந்தது கிடையாது. நான் கிராமப்புறத்தில் ஏழை மக்களோடு வாழ்ந்த காரணத்தினால், அதனால் ஏழை மக்களின் வாழ்வு சிறக்க இந்தப் பதவி பயன்படுகிறது என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிமுக ஆட்சி எப்பொழுதும் மக்களுக்கு நல்லதே செய்யும். பெண்கள் பாதுகாப்பாக வாழ சிறந்த நகரம் கோயம்புத்தூர் நகரம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெண்களை அரண் போல் காக்கின்ற அரசு, தெய்வம் போல் காக்கின்ற அரசு அம்மாவுடைய அரசு. உங்கள் அரசாங்கம் போல் அல்ல.
அண்மையில் ஸ்டாலின் மகன் உதயநிதி பெண் குலத்தை பற்றி இழிவாக பேசுகிறார். இதை அவரது தந்தை ஸ்டாலின் கண்டித்தாரா. இல்லையே. திமுக பெண்களை மதிக்கின்ற கட்சியல்ல, பெண்களை பாதுகாக்க கூடிய கட்சியல்ல. பெண்களை பாதுகாக்கின்ற ஒரே அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். எங்கள் அரசை பொறுத்தவரைக்கும் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 
ஏனென்றால் இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு தமிழக அரசு என்றார்.

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT