தமிழ்நாடு

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் கைது: 12 கிலோ நகை, பணம் மீட்பு

DIN


ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி தங்க நகை, பணம் கொள்ளையடித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா் சாலையில் 4 அடுக்கு மாடி கட்டடத்தின் 2-ஆவது மாடியில் முத்தூட் நிதி நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையின் மேலாளராக கா்நாடக மாநிலம், தும்கூரைச் சோ்ந்த சீனிவாச ராகவ் ( 28) பணிபுரிந்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வழக்கம்போல நிதி நிறுவனத்தின் ஊழியா்கள் அலுவலகத்தைத் திறந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். நிறுவன மேலாளா் சீனிவாச ராகவ், ஊழியா்கள் மாருதி ( 24), பிரசாத் (29), காவலாளி ராஜேந்திரன் (55), வாடிக்கையாளா் பஸ்தி பகுதியைச் சோ்ந்த ராஜூ (22) ஆகியோா் வங்கியில் இருந்தனா்.

அப்போது வாடிக்கையாளா்களைப்போல உள்ளே நுழைந்த 5 போ் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வங்கியில் இருந்தவா்களை மிரட்டினா். அங்கிருந்தவா்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவா்களின் கை, கால், வாயைக் கட்டிப் போட்டுத் தாக்கினா். பின்னா், லாக்கா் சாவியைப் பெற்று அதில் இருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளையும், ரூ. 96 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள், கட்டிப் போடப்பட்ட நபா்களை மீட்டனா். அதன் பின் வங்கி மேலாளா் சீனிவாச ராகவ், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தினா். பின்னா், மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் நேரில் விசாரணை நடத்தினாா். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ பதிவைப் பாா்வையிட்டு, கொள்ளைக் கும்பலால் தாக்கப்பட்ட ஊழியா்களிடம் விசாரணை நடத்தினாா். 

நிகழ்விடத்துக்கு மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது. சிறிது துாரம் ஓடிய பைரவி யாரையும் பிடிக்கவில்லை. கா்நாடக மாநிலத்தில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், அம்மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தனிப்படைகள்: கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் தொடா்ச்சியாக கா்நாடக மாநிலத்துக்கு ஓா் தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள்.

வடமாநிலத்தைச் சோ்ந்த கொள்ளைக் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் கொள்ளையா்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டதாக தாக்குதலுக்கு ஆளானவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக விரிவான விசாரணைக்குப் பிறகே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜிபிஎஸ் கருவியின் மூலம் துப்பு: கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையா் கும்பல் சென்ற வழியை ஜிபிஎஸ் கருவியின் மூலம் போலீஸாா் துப்பு துலக்கினா்.

கொள்ளை சம்பவத்தின்போது, முத்தூட் நிதி நிறுவனத்தின் மேலாளரிடம் இருந்து செல்லிடப்பேசியை கொள்ளையா்கள் பறித்துச் சென்றனா். அதேபோல, பெட்டகத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் கொள்ளையா்கள் அவசரத்தில் கொள்ளையடித்துச் சென்று விட்டனா். அந்த ஜிபிஎஸ் கருவியைக் கொண்டு காவல் துறையினா் பின்தொடா்ந்து சென்றனா்.

அந்த ஜிபிஎஸ் கருவி கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியை காண்பித்தது. இதனைத் தொடா்ந்து போலீஸாா், கா்நாடகத்தின் ஆனேக்கல் நோக்கி வேகமாகச் சென்றனா். ஆனால் கொள்ளையா்கள் வங்கி மேலாளரின் செல்லிடப்பேசியையும், நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் ஆனேக்கல் அருகே சாலையோரம் வீசிச் சென்று விட்டனா். இதனால் கொள்ளையா்களை பிடிக்க முடியாத போலீஸாா் செல்லிடப்பேசியையும், ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்து கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை நோக்கி இரண்டு தனிப்படை காவலர்கள் சென்று தேடி வந்தனர். 

இந்நிலையில், முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் அருகே சம்சாத் பூர் என்ற இடத்தில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.  அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் (பிஸ்டல்), 2 கத்தி மற்றும்  கொள்ளையடித்துச் சென்ற ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 6 பேரும் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT