சென்னை: குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ததை எதிர்த்து திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என். நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிக்கலாமே.. ஒசூர் முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளை
இதே போன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் மௌரியா, தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்த ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், மீண்டும் கிராமசபைக் கூட்டம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கு முன்பே வழக்கை விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. கரோனா சூழலை கருத்தில் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுமா என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.