தமிழ்நாடு

மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார் ஸ்டாலின்: முதல்வர் 

21st Jan 2021 09:45 PM

ADVERTISEMENT

மக்களை ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் கிராமசபைக் கூட்டம் என்ற கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அது மக்கள் கிராமசபைக் கூட்டம் அல்ல. அது மக்களை ஏமாற்றுகின்ற நாடக கூட்டம் என்றுதான் மக்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
ஸ்டாலின் அந்த கூட்டத்தில் இருக்கும் பெண்களைப் பார்த்து, நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றீர்கள். உங்கள் முகத்தில் சிரிப்பினை பார்க்கின்றேன் என்று அழகாக வர்ணித்து வருகிறார். யாரும் மயங்க போவது இல்லை. 
ஏற்கனவே பலமுறை பல திண்ணைகளில் பாய் விரித்து, எதை எல்லாம் செய்ய முடியாதோ, அதை எல்லாம் செய்கிறேன் எனச் சொல்லி. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து. மக்களை ஏமாற்றி, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே கொள்ளைப்புறமாக வெற்றி பெற்றீர்கள். ஆனால், மீண்டும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. இங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போதே நன்றாகத் தெரிகின்றது. 
மீண்டும் அம்மாவின் ஆட்சி தான் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலோடு தி.மு.க, இந்த மண்ணை ஆட்சி செய்யும் தகுதியை இழக்கும் என்பது நன்றாகத் தெரிகிறது. ஏனென்றால், நான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்து மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு வருவதை காணமுடிகிறது. இதற்கு சாட்சியாக இங்கு காணும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்பாடியாவது முதலமைசராக வேண்டும் என்று வெறிகொண்டு, 24 மணிநேரமும் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினால் கூட நான் முதலமைச்சர் ஆவேன், முதலமைச்சர் ஆவேன் என்று கூறிக்கொண்டு தான் இருக்கிறார். எங்களுக்கு அந்த ஆசை இல்லை. இங்கு இருக்கும் அனைவரும் முதலமைச்சர் தான். 
இங்கே இருக்கின்ற மக்கள் என்ன உத்தரவு போடுகின்றார்களோ அதைச் செய்வதுதான் முதலமைச்சர் பணி என்று நினைப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. எப்போது வேண்டுமானாலும் என்னை பார்க்கலாம். எனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், ஸ்டாலினை பார்க்க முடியுமா? ஏன், தி.மு.க கட்சிக்காரர்களைக் கூட பார்க்க முடியாது. 
நேற்றைய தினம் கூட அனைவருடனும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிட்டோம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் மாதிரி. நான் என்னை முதலமைச்சராக எண்ணிப் பார்த்தது இல்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாகத்தான் என்னை கருதி நான் நடந்து கொண்டு இருக்கிறேன்.
ஸ்டாலின், தி.மு.க 234 தொகுதியிலும் ஜெயிக்கும் என கனவு கண்டுகொண்டு இருக்கிறார். அது கனவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டத்திலே ஒரு பெண்ணிடம் சொல்லி கொடுத்து, எங்கள் துணை முதலமைச்சரை பற்றி தவறாக பேச வைத்துவிட்டு, அதை அடக்குவது போல நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். ஒரு கட்சித்தலைவர் என்றால் பண்பாடு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


 

Tags : election campaign
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT