தமிழ்நாடு

அதிமுக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

DIN

மதுரை: அதிமுக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லை; மாறாக ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வருவதே திமுகவின் விருப்பம்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:  சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துவிட்டது. இன்னும் 4 மாதங்களில் அதிமுக ஆட்சியை அகற்றிவிட முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

முதல்வர் பதவி:  தேர்தலில் ஓட்டுப் போட்டு யாரும் முதல்வர் பதவிக்கு வருவதில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். முதல்வர் பொறுப்புக்கு வருபவர்களை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்வதில்லை. ஆனால்,  இவர் தான் முதல்வர் என்ற அடிப்படையிலேயே 234 தொகுதிகளிலும் மக்கள் வாக்களிக்கின்றனர். 

இப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தல் நடைபெறும்போது அவர் முதல்வராவார் என யாரும் வாக்களிக்கவில்லை. 

ஆட்சியை கவிழ்க்க நினைத்து யார்?: அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தாக திமுக மீது புகார் கூறியிருக்கின்றனர். திமுகவுக்கு ஒருபோதும் அத்தகைய எண்ணம் கிடையாது. அவ்வாறு கவிழ்க்க நினைத்திருந்தால், ஒரு நொடியில் அதைச் செய்திருக்க முடியும். 

ஆனால், ஜனநாயக முறையில் மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வருவதே திமுகவின் விருப்பம். கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள் மற்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் தான்  அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தனர். அதிமுகவினரே அவர்களது ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டனர்.

அறிவிப்போடு போன திட்டங்கள்:  கடந்த 10 ஆண்டுகால  அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

திருமங்கலம் பிரதான கால்வாய் தூர்வாருவது,  திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம், புறநகர் பேருந்து நிலையம்,  திருமங்கலம் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்துவது இப்படி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தோம். அதன் பிறகு அதே அறிவிப்பை வெளியிடுவதற்கு அதிமுக அரசு தயாராகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் நிச்சயம் வெளிக் கொண்டுவரப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT