தமிழ்நாடு

காங்கிரஸ் - பணியுமா, விலகுமா?

அஜாத சத்ரு


பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதனால்தானோ என்னவோ தமிழக அரசியல் களம் அதிவேகமாகச் சூடு பிடிக்கிறது.

இப்போது எல்லோருடைய கவனமும் காங்கிரஸ் மீதுதான் குவிந்திருக்கிறது. புதுச்சேரியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் திருப்பம், தமிழ்நாடு காங்கிரûஸ நிலைகுலைய வைத்திருக்கிறது. 

""30 தொகுதியிலும் வெற்றி பெற்று புதுவையில் திமுக தலைமையில்  ஆட்சி அமையும்'' என்று புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியிருப்பது, காங்கிரஸ்காரர்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

""25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல புதுவையில் மீண்டும் திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இதை யாராலும் தடுக்க முடியாது'' என்று அந்தக் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியதும், ""சொர்க்க பூமியான புதுவையைப் பார்க்கும்போது எனக்கு வயிறு எரிகிறது. புதுவையில் பல ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. அதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. புதுவை மாநில வளர்ச்சிக்கு இதுவரை என்ன திட்டங்கள் தீட்டியிருக்கிறீர்கள்?'' என்றும் அவர் அந்தக் கூட்டத்தில் பேசியதற்குக் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்திருக்கிறது.

கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே காங்கிரûஸ திமுக விமர்சிப்பதால், இதற்குப் பின்னால் ஏதோ திட்டமிட்ட அரசியல் சதி இருப்பதாகத்தான் புதுவையின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே கருதுகிறார்கள். திமுக தலைமையின் அனுமதி இல்லாமல் ஜெகத்ரட்சகன் அப்படி பேசியிருக்கமாட்டார் என்று அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஒருவகையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரûஸ வெளியேற்றும் முயற்சி இது என்பது அவர்கள் கருத்து.

ஜெகத்ரட்சகனின் புதுவை விஜயமும், அவர் திமுக தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரையும் முதல்வர் நாராயணசாமியை மிகவும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கெனவே ஆளுநர் கிரண்  பேடியுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது கூட்டணிக் கட்சியே கூட இருந்து குழி பறிப்பதன் காரணம் அவருக்கு விளங்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமாக இருப்பது புதுவை மட்டுமே. அதையும் இழந்துவிடக் காங்கிரஸ் தலைமை தயாராக இல்லை. அதனால்தானோ என்னவோ, முதல்வர் நாராயணசாமியையும், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனையும் உடனடியாக தில்லிக்கு அழைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

புதுவை முதல்வர் நாராயணசாமியும், ஏ.வி.சுப்பிரமணியனும் மட்டுமல்ல, கட்சிப் பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவும் தில்லி விரைந்திருக்கிறார். அவர்கள் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் சந்திக்க இருப்பதாக தில்லியிலிருந்து தகவல் வருகிறது. 
புதுவையில் திமுக தனித்துப் போட்டியிடுவது என்றோ அல்லது திமுக தலைமையில் கூட்டணி என்றோ நிலைமை ஏற்பட்டால், திமுகவுடனான கூட்டணியைத் தமிழகத்திலும் முறித்துக் கொள்வது என்கிற மனநிலைக்குக் காங்கிரஸ் தலைமை வரக்கூடும்.

பாஜகவை எதிர்ப்பதற்குத் திமுகவின் துணை தேவைப்படுகிறது என்பதால்தான், காங்கிரஸ் தலைமை கூட்டணியை முறித்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது என்றும், அதற்காக சுயமரியாதையை விட்டுக் கொடுத்து கூட்டணியில் ஒருசில இடங்களை மட்டும் பெற்றுக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

1991 வரையிலும்கூட அதிமுக கூட்டணியில் 60 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, இப்போது 30 இடங்களுக்கு திமுகவுடன் கையேந்தி நிற்க வேண்டிய அவலம் வந்துவிட்டது என்பதுதான், பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் ஆதங்கம். 2016 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்பதற்காக, காங்கிரஸின் பலத்தைத் திமுக குறைத்து மதிப்பிடுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

""திமுக, அதிமுகவிற்குப் பிறகு, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புப் பெறும் அளவில் வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். திமுக, அதிமுக என்று மாறிமாறிக் கூட்டணி வைத்துக் கொண்டதால்தான், அமைப்பு ரீதியாக கட்சி பலவீனப்பட்டு, இப்போது முப்பது இடங்களுக்குக் கையேந்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2016-இல் ஒதுக்கப்பட்டதுபோல 41 இடங்களை ஒதுக்காவிட்டால், தனியாகப் போட்டியிட்டு, வைப்புத் தொகை இழந்து தோற்றாலும்கூடப் பரவாயில்லை. கெளரவமாவது மிஞ்சும். கட்சியை அமைப்பு ரீதியாக நாம் பலப்படுத்த அது அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்'' என்று கட்சியில் பலரும் அபிப்பிராயப் படுகிறார்கள்.

சமீபத்தில் காரைக்குடியில் நடந்த ஊழியர் கூட்டத்தில் பேசும்போது, ""அதிமுகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுக்கு இப்போது பணபலத்துடன் ஆட்சி பலமும் இருக்கிறது'' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பேசியிருப்பது, திமுகவினரை காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது. 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், "ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலை துளிர்க்கும்' என்று ப. சிதம்பரம் பேசியதையும், உளவுத் துறையின் மூலம் தகவல் கிடைத்தபோது துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் ஆத்திரப்பட்டதையும்கூட அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அரசியல் அனுபவசாலியான ப. சிதம்பரமேகூட திமுகவின் பெரியண்ணன் அணுகுமுறையால் வெறுப்படைந்திருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது.

கெளரவமான இடங்கள் ஒதுக்கப்படுவது மட்டுமல்ல, தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்பதும் உறுதிப்பட்டால்தான் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. 2006-இல் ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவரவிட்டு, "மைனாரிட்டி' திமுக அரசை ஐந்து ஆண்டுகள் காப்பாற்றியதற்கு திமுக தங்களுக்குச் செய்யும் நன்றி கடன்தான், ஒருசில இடங்களுக்காக கையேந்தி நிற்க வைத்திருப்பது என்று காங்கிரஸில் ஒருசாரார் ஆத்திரப்படுகிறார்கள். 

காங்கிரûஸ வெளியேற்றி, பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவினர் மத்தியிலேயே, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுப்பது போலவே,  திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சியிலும் கோரிக்கை உயர்கிறது.

""திமுகவும், அதிமுகவும் இல்லாத ஆட்சி வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு ஏற்படுத்தியது. அவர் ஒதுங்கிவிட்ட நிலையில், அந்த வாக்காளர்களின் ஆதரவு காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதற்குத் திரும்பும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த அணியில் இடம் பெறுமானால், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியாவிட்டாலும், ஆட்சியைத் தீர்மானிப்பது காங்கிரஸ் தலைமையிலான அணியாக இருக்கும்.'' - மக்களவை உறுப்பினராக இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்து இது.

கணிசமான இடங்களில் போட்டிபோட்டு, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வர இருக்கும் சட்டப்பேரவை வாய்ப்பாக அமையும் என்று காங்கிரஸில் பலரும் கருதுகிறார்கள். குறைந்த இடங்களுக்கு ஒப்புக் கொண்டால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும் என்பது அவர்களின் நியாயமான கவலை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியே திமுகவின் அணுகுமுறையால் வெறுத்துப் போயிருப்பதாகக் கூறுகிறார்கள். கணிசமான இடங்களை திமுகவிடம் பெறாமல் போனால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் தனக்கு மரியாதை இருக்காது என்று அவர் கருதுவதில் நியாயம் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT