தமிழ்நாடு

தனியார் மூலம் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு: தகவல்களில் குளறுபடி இருப்பதாகப் புகார்

21st Jan 2021 05:50 AM | ம.முனுசாமி

ADVERTISEMENT


கோவை,: தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்படும் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில் தவறுகள், குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதால் இதில் சேகரிக்கப்படும் விவரங்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக அரசு அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

நாடு முழுவதும் பொருளாதாரக் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்படாத தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகப் புள்ளியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதுவரை பொருளாதாரக் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், முதல்முறையாக, 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது சேவை மையம் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளது.

வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் குடும்பத் தலைவர், உறுப்பினர்கள், குடும்பத் தலைவரின் தொழில், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் தொழில்கள், குடும்ப வருமானம் குறித்த தகவல்கள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பதிவு செய்யப்படாத பூ கட்டுதல், மாவு அரைத்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல், உணவுப் பொருள்கள் விற்பனை, கேட்டரிங் சர்வீஸ் உள்பட விவசாயம் தவிர்த்து மற்ற அனைத்துத் தொழில்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

மேலும், வீடுகளுக்குள்ளே செய்யப்படும் தொழில்கள் நிரந்தரமாக மேற்கொள்ளப்படுகிறதா, சீசனுக்கு மட்டும் தற்காலிகமாக மேற்கொள்ளப்படுகிறதா, வீட்டில் உள்ள நபர்களே தொழில்களில் ஈடுபட்டுள்ளனரா, வெளியாள்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்பதையும் பதிவு செய்ய வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விவரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறதா, ஜிஎஸ்டி விவரங்கள் குறித்தும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களுக்குப் பணிகள் தொடங்குவதற்கு முன் கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்க வேண்டிய தகவல்கள், தொழில்களின் விவரங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 40 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 100 களப் பணியாளர்கள் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சியில் வீடுகள், கடைகள் சேர்த்து 5,000 எண்ணிக்கையை ஒரு யூனிட்டாக நிர்ணயித்து 120 யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டும் ஒரு யூனிட்டாகவும், ஒவ்வோர் ஊராட்சியும் ஒரு யூனிட்டாகவும் பிரித்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய கணக்கெடுப்புப் பணிகள் 15 மாதங்களில் 62 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் கணக்கெடுப்புப் பணிகளை நிறைவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும், மூன்று மாதங்களுக்குள் 38 சதவீத பணிகள் நிறைவுபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தனியார் முகமை மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மாநில புள்ளியியல் துறை, மத்திய புள்ளியியல் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது.

தனியார் முகமை மூலம் எடுக்கப்பட்ட விவரங்களைப் புள்ளியியல் துறையினர் மறு ஆய்வு செய்ததில் தொழில்கள் குறித்து தவறான தகவல்கள், குளறுபடிகள் காணப்படுவது தெரியவந்துள்ளது.

கோவை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதே நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்களின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கோவை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் இசக்கியப்பன் கூறியதாவது: பொருளாதாரக் கணக்கெடுப்பில் தனியார் முகமை மூலம் மேற்கொள்ளப்படும் விவரங்களில் 8 சதவீதம் மாநில புள்ளியியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது. மாநில புள்ளியியல் துறையைச் சேர்ந்த 11 மேற்பார்வையாளர்கள் மறு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ததில் தனியார் முகமை மூலம் சேகரித்த தகவல்களில் ஒரு சில இடங்களில் தவறுகளும், குளறுபடிகளும் காணப்படுகின்றன. 

இது போன்ற தவறுகளை இணையதளத்தில் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னையால் சரிசெய்ய முடியவில்லை. இது தொடர்பாக தனியார் முகமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணிக்காக ஆரம்பத்தில்தான் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால் உரிய விவரங்களை சேகரிக்க முடிவதில்லை. இதனால் தேசிய அளவில் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடும்போது தவறான புள்ளிவிவரங்கள் வெளியாக வாய்ப்பிருக்கும் என்றார்.

இது தொடர்பாக பொது சேவை மையத்தின் கோவை மாவட்ட மேலாளர் பாலமுருகன் கூறியதாவது: 

அனைத்து களப் பணியாளர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்பே கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது வீடுகள், கடைகளில் உள்ளவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் தவறான தகவல்களை அளிக்கின்றனர். ஒரு சில இடங்களில் கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கு விவரங்கள் அளிக்க மறுக்கின்றனர். 

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே உண்மையான தகவல்கள் கிடைக்கும். இதுவரையில் 7 லட்சத்து 61,657 வீடுகள், கடைகளிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 4.5 லட்சம் வீடுகள், கடைகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். மார்ச் மாதத்துக்குள் இப்பணிகளை முடிக்க முடியுமா என்பது சந்தேகமே. மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT