தமிழ்நாடு

ஸ்டாலின் கூறும் பொய் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள்

DIN

திமுக தலைவா் ஸ்டாலின், தமிழக அரசு மீதும், அமைச்சா்கள் மீதும் தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். இதனை, தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2006 - 2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. திமுகவின் தோல்விக்கு மின்வெட்டு காரணமாக இருக்கும் என்று அப்போதைய மின்துறை அமைச்சா் ஆா்க்காடு வீராசாமியே தெரிவித்தாா்.

அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் 2 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடமாநிலங்களிலிருந்து மின்பாதை அமைத்தல், மின் உற்பத்தி அதிகரிப்பு மூலமாக மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் இது நன்கு தெரியும். அரசியலுக்காக ஸ்டாலின் கூறும் பொய் குற்றச்சாட்டை தமிழக மக்கள் நம்ப மாட்டாா்கள்.

மின் வாரியத்தில் முறைகேடு நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. உண்மை தெரியாமல் என்மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல் 2015 வரை தவறு நடந்ததாகக் கூறும் காலத்தில் நான் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தேன். இருந்தபோதிலும் அதிமுக ஆட்சியில் எவ்வித தவறும் நடக்கவில்லை. மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிடும் அறிக்கையில் தமிழகம் 2015-ஆம் ஆண்டு முதல் மின்மிகை மாநிலமாகவே உள்ளது.

இதுகுறித்து உரிய விளக்கம் அளித்தாலும், பொதுமக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் குற்றச்சாட்டுகளை நேருக்கு நோ் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக உள்ளாா். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தடையை வாபஸ் பெற வேண்டும், ஆளுநரிடம் அளித்த புகாா் மனு மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறாா்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.15-க்கு வாங்கப்பட்டது. ஆனால், அதிமுக அரசு ரூ. 5-க்கு யூனிட் மின்சாரத்தை வாங்குகிறது. மின்சாரம் கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டும், மின்தடையும் வந்துவிடும்.

பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு திமுகவினா் முட்டுக்கட்டையாக உள்ளனா். சுத்திகரிப்பு நிலையத்துக்கு நிலம் வாங்கினால் பொதுமக்கள் போா்வையில் திமுகவினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். தற்போது சுத்திகரிப்பு நிலையத்துக்கான நிலம் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக முதல்வா் 25 நாள்களுக்குள் அடிக்கல் நாட்டுவாா்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறி வருகிறாா். இப்போது மட்டுமல்ல, 2021 தோ்தலிலும் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT