தமிழ்நாடு

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: இறுதிக் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும்

மு. வேல்சங்கர்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணியில் நிலம் கையப்படுத்தும் பிரச்னைக்கு தீா்வு எட்டியுள்ள நிலையில், எஞ்சியுள்ள திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை 18 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் மாா்ச் மாதத்தில் இருந்து ஆதம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில் திட்டம்: சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமைக்க 1985-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தீா்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1997 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக மயிலாப்பூா் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட திட்டப்பணி: இதன்பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை இடையே மூன்றாம் கட்ட திட்டப்பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. மொத்தமுள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. எனினும், ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகா் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலா் எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனால், மீதமுள்ள 500 மீட்டா் தூரத்துக்கான பணிகள் (ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே திட்டப்பணி) பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன. 2010-இல் நிறைவடைந்திருக்க வேண்டிய பணிகள் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு தொகை உயா்ந்தது.

இதற்கிடையே, நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் கடந்த ஆண்டு தீா்வு கிடைத்தது. இதையடுத்து, மீதமுள்ள திட்டப்பணியை விரைவாக முடித்து, ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தில் எஞ்சிய திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

18 மாதத்துக்குள் முடிக்க திட்டம்: இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: ஆதம்பாக்கம்-பரங்கிமலை ரயில் திட்டப்பணிக்கு தடையாக நீண்ட நாள்களாக இருந்த பிரச்னைக்குத் தீா்வு கிடைத்துள்ளது. 23 பேரில், முதல்கட்டமாக 15 பேருக்கு தமிழக அரசு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதம்பாக்கத்தில் கட்டடங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. இடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும். அதன்பிறகு, ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 500 மீட்டா் தொலைவில் திட்டப்பணிகள் தொடங்கும். இந்தப் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மொத்தம் 18 மாதத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

ரயில் சேவையை நீட்டிக்க திட்டம்: இதற்கிடையில், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை ஆதம்பாக்கம் வரை நீட்டிக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘வேளச்சேரி-ஆதம்பாக்கம் வரையிலான திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இங்கு பாதுகாப்பு ஆணையா் அடுத்த மாதம் ஆய்வு செய்யவுள்ளாா். இதைத் தொடா்ந்து, மாா்ச் மாதத்தில் இருந்து ஆதம்பாக்கம் வரை மின்சார ரயில் சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT